Type Here to Get Search Results !

திமுக போலீஸ் ஓட்டுக்கு பணம்.... திடுக்கிடும் தகவல்...!

  

அ.தி.மு.க., அமைச்சர்கள் ஒருத்தர் கூட வெற்றி பெறக்கூடாது' என்பதில், ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். 

குறிப்பாக, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., ராஜேந்திர பாலாஜி, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரை தோற்கடிக்க என்ன வேண்டுமானாலும்செய்யலாம் என, அறிவாலயத்தில் இருந்து கீழ் மட்டம் வரை தகவல் போயிருக்கிறது.

முந்தைய தேர்தல்களில், இப்படி குறி வைத்து தாக்கும் வியூகங்கள் இருந்ததில்லை.

 இப்போது, தி.மு.க., அந்த வழியில் செல்வதைக் கண்டு, முதல்வர், - துணை முதல்வருக்கு கடும் கோபம்.

 எனவே, தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை வீழ்த்த, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என, கட்சி நிர்வாகிகளுக்கு, அவர்கள் பச்சைக்கொடி காட்டினர்.

இதையடுத்து, அடையாளம் காட்டப்பட்ட தொகுதிகளில், தி.மு.க.,வினர் போலவே கரை வேட்டி கட்டி, அ.தி.மு.க.,வினர் தேர்தல் வேலையில் கலந்து, முக்கிய தகவல்கள் அனைத்தையும் திரட்டி, மேலே அனுப்பி வருகின்றனர்.

உளவுத் துறைக்கு தகவல்

அவ்வாறு, திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து மேலிடத்துக்கு, 27ம் தேதி காலை ஒரு தகவல் வந்தது.

 திருச்சி கன்டோன்மென்ட், உறையூர், மருத்துவமனை, நீதிமன்றம் ஸ்டேஷன்களில் உள்ள போலீசாருக்கு, தி.மு.க., தரப்பில் பணப் பட்டுவாடா செய்யப்படும் என்பது அந்த தகவல். 

மணிவண்ணன் பாரதி என்ற வக்கீல் தான், ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் போகவிருக்கிறார்என்பதும், அந்த தகவலில் இருந்தது.

அ.தி.மு.க., மேலிடம் அதை உளவுத் துறைக்கு அனுப்பியது.

 அவர்கள் திருச்சி போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு அனுப்பினர். 

அவர், 'லோக்கல்' போலீசாரை அனுப்பி, மணிவண்ணன் பாரதியை பின் தொடரச் சொல்லியிருக்கிறார். 

அதன்படி, பாரதியை ரகசியமாக பின் தொடர்ந்த போலீசார், அவர் போலீசாருக்கு பணம் பட்டுவாடா செய்ததை ஊர்ஜிதம் செய்தனர்.

உடனே, ஒரு உதவி கமிஷனரை அனுப்பி விசாரித்தார் லோகநாதன். 

ஒரு ஸ்டேஷனில், பெயர் எதுவும் எழுதப்படாத வெள்ளை நிற கவர்களில், 70 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை, உதவி கமிஷனர் தலைமையில் சென்ற, 'டீம்' கைப்பற்றியது.

 அங்கிருந்த அனைத்து போலீஸ்காரர்களின் மொபைல் போனையும் வாங்கி வைத்துக் கொண்டு, அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்கும் சென்று, சோதனை செய்தபோது, அங்கும் இதே போன்ற வெள்ளை கவர்களில், ஏராளமான ரொக்கம் சிக்கியது.

இதை கமிஷனரிடம் தெரிவித்தனர். 

சிக்கிய போலீசாரில் பெண் போலீசாரும் இருந்ததால், அவர்களை தனியே விசாரித்தால் உண்மை வந்து விடும் என, கமிஷனர் சொன்னார். 

அவர் எதிர்பார்த்தது போலவே, பெண் போலீசார் என்ன நடந்தது என்பதை, அப்படியே சொல்லி விட்டனர். அதை உதவி கமிஷனரின், 'டீம்' வீடியோவில் பதிவு செய்தது.

கமிஷனருக்கு உடனுக்குடன் தகவல் சென்றது. 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக, 'சஸ்பெண்ட்' செய்த கமிஷனர், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார். 

ஓட்டுக்காக போலீசாருக்கு பணம் கொடுத்ததாக, வக்கீல் பாரதி மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

தேர்தல் நேரம் என்பதால், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை தவிர்க்க, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றலாம் என, உளவுத் துறை பரிந்துரை செய்தது. அவரும் அதை ஏற்று உத்தரவு பிறப்பித்தார்.

விவகாரம் வெளியே வந்ததுக்கு பின்னால் உள்ள காரணம் சுவாரசியமானது.

'தேர்தல் பணியில் இருப்பதால், போலீசார் தபால் வாயிலாக ஓட்டு போடலாம்' என, தேர்தல் கமிஷன் ஆணையிட்டது.

 அதன்படி, போலீசார் தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டது. 

தி.மு.க.,வுக்கு ஓட்டு போட, இன்ஸ்பெக்டருக்கு 5,000, சப்- -இன்ஸ்பெக்டருக்கு, 3,500, ஏட்டுக்கு, 2,500, கான்ஸ்டபிளுக்கு, 2,000 என, கொடுத்துள்ளனர்.

அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றம்

பதவி எதுவாக இருந்தாலும், ஓட்டு ஒன்று தானே; அப்படி இருக்கும் போது பதவிக்கு தகுந்த மாதிரி பணத்தை கூட்டி குறைத்து கொடுத்தது என்ன நியாயம்? என்பது தான்பிரச்னைக்கான காரண கேள்வி.

'ஒரு வேளை, தி.மு.க., மேலிடம் கொஞ்சம் புத்திசாலித்தனமாக, அனைத்து போலீசாருக்கும் ஒரே மாதிரியாக, 5,000 அல்லது, 3,000 ரூபாய் வழங்கி இருந்தால், இந்த விவகாரம் வெளியே வராமலே போயிருக்கும்' என, ஒரு அதிகாரி குறிப்பிட்டார்.

 அனுபவசாலியான கருணாநிதி இருந்திருந்தால், இப்படி நடக்க விட்டிருக்க மாட்டார் என்றார் அவர்.

வாக்காளர்களுக்கு பணம் என்பதை தாண்டி, போலீசாருக்கு பணம் என்ற, அடுத்த கட்டத்துக்கு தமிழக தேர்தல் முன்னேறி இருப்பதை, தேர்தல் கமிஷன் பிரமிப்பு கலந்த எரிச்சலோடு பார்க்கிறது.

 பண நடமாட்டம் அதிகமாக இருந்ததை காரணம் காட்டி, 2016ல் அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் தேர்தலை நிறுத்தியது போல, திருச்சியிலும் செய்யலாமா அல்லது, தி.மு.க., வேட்பாளர் நேரு, தகுதி இழந்ததாக அறிவிக்கலாமா என்றும் கமிஷன் ஆலோசித்து வருகிறது.

கதைக்கு ஒரு திருப்பம் கொடுக்க முயல்வது போல, நேரு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், 'வழக்கறிஞர் மணிவண்ணன் பாரதி, தி.மு.க.,வே கிடையாது.

 அவருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது, அ.தி.மு.க.,வின் சதி' என்று, தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., வட்டாரங்களில் விசாரித்தால், 'திருமங்கலம் பார்முலா' என்ற, ஒரு தேர்தல் தத்துவத்தை உருவாக்கியதே, தி.மு.க., தான். 

இது உலகம் முழுக்க பல்கலைக்கழகங்களில், பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த, 'பார்முலா'வை அடுத்த கட்டத்துக்கு, தி.மு.க., எடுத்து சென்றுள்ளது.

 போலீசுக்கே பணம் என்பதும், உலக சாதனையாகவே இருக்கும். 

அந்த வகையில், தி.மு.க.,வின் தில்லுமுல்லுகள் உலக அளவில் பிரபலம் ஆவதை பார்க்கும் போது, கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கிறது' என்றார், ஒரு சீனியர் அமைச்சர்.

திருச்சி நிருபர் தரும் கூடுதல் தகவல்:

நேருவுக்கு ஆதரவாக தபால் ஓட்டு போட, மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர், தில்லைநகர், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், கன்டோன்மென்ட், எ.புதுார் உட்பட, எட்டு போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசாருக்கு, பணம் கொடுக்கப்படுவதாக போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவுப்படி, பொன்மலை, ஏ.சி.,க்கள் வீரமணி, தமிழ்மாறன் தலைமையில் போலீசார், அந்த எட்டு இடங்களிலும், சோதனை நடத்தினர். 

தில்லைநகர், அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷன்களில், 2,000 ரூபாய் அடங்கிய, 70 கவர்கள் சிக்கின.

 மற்ற இடங்களில் கவர்களை போலீசார் எடுத்துச் சென்று விட்டது தெரிந்தது. 

தில்லைநகர் மற்றும் அரசு மருத்துவமனை போலீசாரிடம் கமிஷனர் லோகநாதன் விசாரணை நடத்திய போது, மேற்கு தொகுதி தேர்தல் அலுவலர் விஸ்வநாதன், தேர்தல் பார்வையாளர் கிரிஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போட பணம் கொடுத்ததையும், அதை தாங்கள் வாங்கியதையும், தில்லைநகர் போலீஸ் ஏட்டு சுகந்தி, 41, அரசு மருத்துவமனை ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ பாலாஜி, 55, ஆகியோர் ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. 

தி.மு.க., வக்கீல் மணிவண்ண பாரதி, 41, என்பவர் தான், பணம் கொடுத்தார் என, அவர்கள் தெளிவாக தெரிவித்தனர்.

இதையடுத்து, ஏட்டு சுகந்தி, எஸ்.எஸ்.ஐ., பாலாஜி, வக்கீல் மணிவண்ண பாரதி ஆகியோர் மீது, இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். 

தில்லைநகர் இன்ஸ்பெக்டர் சிவகுமார், 49, நுண்ணறிவுப் பிரிவு எஸ்.எஸ்.ஐ., கலியமூர்த்தி, 54, அரசு மருத்துவமனை எஸ்.ஐ., ஸ்டெல்லா மேரி, நுண்ணறிவுப் பிரிவு எஸ்.எஸ்.ஐ., சங்கர், 52, ஆகியோர் ஓட்டுக்கு பணம் கொடுக்க உடந்தையாக இருந்தனர் என்பதால், அவர்களையும், பாலாஜி, ஏட்டு சுகந்தி ஆகியோருடன் சேர்த்து, 'சஸ்பெண்ட்' செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.

நேற்று முன்தினம், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தரப்பில், தபால் ஓட்டு போட்டுள்ளனர். 

அவர்களுக்கும், நேரு தரப்பில், பணம் வழங்கப்பட்டதாகவும், இதற்காக கொடுக்கப்பட்ட பணத்தை, ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர், அமுக்கி விட்டதாகவும், தகவல்கள் வெளியாகின. 

அது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

போலீசார் எங்கெல்லாம், வாகன சோதனை நடத்த செல்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள, நுண்ணறிவுப் பிரிவு எஸ்.எஸ்.ஐ.,க்கள் கலியமூர்த்தி, சங்கர் ஆகியோருக்கு தனியாக பணம் கொடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

நேரு ஜெயிப்பார் என, கருத்து கணிப்புகள் கூறும் நிலையில், தேவை இல்லாமல் ஏன் இப்படி லஞ்சம் கொடுத்து சிக்க வேண்டும்? என, தி.மு.க., வட்டாரத்தில் விசாரித்தோம்.

'ஆரம்பத்தில் எங்கள் பக்கம், அலை வீசுவது போல தோன்றியது. 

ஆனால், படிப்படியாக அது மாறி இப்போது மக்கள், தி.மு.க.,வுக்கு எதிராக திரும்பி விட்டதாக, ரகசிய சர்வேக்கள் வாயிலாக தெரிய வந்தது. 

எனவே தான், நிரூபிக்கப்பட்ட ஒரு வழிமுறையை கையில் எடுத்தோம். அது இப்படி முடியும் என எதிர்பார்க்கவே இல்லை' என, ஒரு சீனியர் நிர்வாகி மனம் திறந்து சொன்னார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom