“உயிரோட இருக்கணும் குமாரு..” தனது ஸ்டைலில் மாஸ்க் அணிய சொல்லும் செல்வராகவன்!
இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவின் மிகவும் பாராட்டப்பட்ட இயக்குநர்களில் ஒருவர். புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்று பல தரப்பட்ட வித்தியாசமான படங்களை மக்களுக்கு ஜனரஞ்சகமாக வழங்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் வியாபார ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றபோதம் அவர் இயக்கத்திற்கு நிகர் அவரே என்ற அளவிற்கு எல்லா படங்களும் தரமான திரைப்படங்களாகவே இருந்துவருகின்றன. இவருடைய ரசிகர்களும் இவரது படத்தை எப்போதும் கொண்டாட மறந்ததில்லை. சரியான அங்கீகாரம் கிடைக்காமல் காலம் தாழ்ந்து கொண்டாடப்படும் சில படங்களும் உள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான என்.ஜி.கே. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பொதுவாக அமைதியாக இருக்கும் செல்வராகவன் இந்த லாக்டவுன் காலத்தில் தனது சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பது அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக செல்வராகவன் இந்த லாக் டவுன் காலத்தில் தன்னுடைய பழைய திரைப்படங்களை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றார். மேலும் அவர் தனது வரவிருக்கும் அடுத்தடுத்த திட்டத்திற்காக தயாராக உள்ளார் என்பதும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.

இப்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா விழிப்புணவுக்காக போட்ட பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது. தனது இயக்கத்தில் தனுஷ் நடித்து இன்று வரை பாரட்டப்படும் திரைப்படமான ‘புதுப்பேட்டை' படத்திலிருந்து தனுஷுடைய லேட்டஸ்ட் கொரோனா வெர்ஷன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் செல்வா. அதாவது, அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘கொக்கி குமாரு' மாஸ்க் அணிந்திருப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “இப்பல்லாம் உயிரோட இருக்கணும் குமாரு.. அது மட்டும்தான் மேட்டரு !!” என்று கூறியுள்ளார்.

செல்வராகவன் ‘புதுப்பேட்டை-2'வுடன் இன்னும் சில கதைகளை எழுதிக்கொண்டிருப்பதாக தகவல் உள்ளது. மேலும், அவர் ‘சாணிக் காயிதம்' எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கேர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

Post a comment

0 Comments