Type Here to Get Search Results !

இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்

 இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை வீசுவதால் எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காஸா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது படையெடுத்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணயக்கைதிகளாக காசாவுக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக் குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை மீட்டது. மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது.

அதே நேரத்தில், ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் ஹமாஸ் ஆயுதக் குழு உட்பட 33 ஆயிரத்து 634 பேர் காஸாவில் உயிரிழந்துள்ளனர். இதேபோல் மேற்குக் கரையில் நடந்த மோதலில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் ஆயுத மோதலில் ஈரான் ஹமாஸை ஆதரிக்கிறது. மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சிரியா மற்றும் லெபனானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சி ராணுவத்தின் மூத்த தளபதி முகமது ரிசா சாகிடி உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், உரிய பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்தது. இதனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஈரான் தங்கள் நாட்டை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஏவுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய முதல் நேரடி தாக்குதல் இதுவாகும்.

ஈரானில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈராக் மற்றும் ஜோர்டானும் தங்கள் நாட்டின் மீது ஆளில்லா விமானங்கள் பறந்ததாக தெரிவித்தன. அதேபோல், இஸ்ரேலை நோக்கி சென்ற ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். ஏவுகணைகள் வீசப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவமும் கூறியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால் மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom