ராதிகா வேளச்சேரி தொகுதியில் போட்டி.... அதிரடி அறிவிப்பு

 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அகில இந்திய சமத்துவ மக்கள் சட்சி, ஐஜேகே இணைந்து மாற்றத்திற்கான புதிய கூட்டணியை உருவாக்கின. இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள திரவியபுரத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்திற்கு முன்னதாக கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். புதிதாக கட்சியில் தோற்றுவிக்கப்பட்ட முதன்மை துணைப் பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

பொருளாளராக A.N. சுந்தரேசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்படவர்கள் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். அதன் பின்னர் ராதிகா சரத்குமார் குத்து விளக்கேற்றி பொதுக்குழு கூட்டத்தை தொடங்கிவைத்தார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய துணை பொதுச்செயலாளர் விவேகானந்தன், வரும் சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் சார்பில் ராதிகா வேளச்சேரி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். கணவரின் சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால் சின்னத்திரையிலிருந்து முற்றிலும் விலகிய ராதிகா, அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மற்றொருபுறம் கமலின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து சமத்துவ மக்கள் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Post a comment

0 Comments