Type Here to Get Search Results !

தேர்தல் பேக்கேஜ் நியூஸ் கலாச்சாரத்தால் மரியாதை இழக்கும் ஊடகத் துறை....!


இதப்படிங்க முதல்ல....

தேர்தல் பேக்கேஜ் நியூஸ் கலாச்சாரத்தால் மரியாதை இழக்கும் ஊடகத் துறை !
அவமானத்தால் சிக்கித் தவிக்கும் செய்தியாளர்கள் !

டி.எஸ்.ஆர்.சுபாஷ்


பணம் கொடுத்து விளம்பரங்களை போடுவது பத்திரிகைகளின் வழக்கம் !

விளம்பரங்கள் தருபவர்களின் செய்திகளை போடுவது ஒரு முறை !

பணம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளை மறைப்பது அடுத்த நிலை !

பெய்டு நியூஸ் கலாச்சாரம் துவங்கப்பட்டு, பணம் வாங்கிக் கொண்டு ஒரு நிறுவனத்தை தூக்கிப் பிடிப்பது ஒரு கட்டம் !

அதில் அடுத்த நிலை, பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு எதிரானவர்களைப் பற்றி அவதூறு பரப்புவது !

இதன் தொடர்ச்சியாக விளம்பரங்கள் தராத கட்சிகளையும், தலைவர்களையும் ஒதுக்குவது !

கடந்த சிலஆண்டுகளாக தேர்தல் செய்திகளை வெளியிட கட்சி மற்றும் வேட்பாளர்கள்களிடம் மொத்தமாக ஒரு தொகையை பேக்கேஜ் முறையில் பேசி அவர்களுடைய புகைப்படங்கள் மற்றும் செய்திகளை வெளியிடும் ஒரு கலாச்சாரத்தை துவக்கி வைத்தது "தினத் தந்தி" நாளிதழ் !

தமிழ் மொழியையும் தமிழர்களையும் உலக அளவில் எடுத்துச் செல்ல ஆயுதமாக விளங்கிய ஒரு ஈடு இணை இல்லாத பத்திரிகை "தினத் தந்தி" !

அப்படிப்பட்ட தினத்தந்தி இந்த பேக்கேஜ் நியூஸ் கலாச்சாரத்தை கொண்டு வந்தது !

அதன் அடிப்படையில், மற்ற கட்சி மற்றும் வேட்பாளர்கள் பற்றிய செய்திகளை விட இந்த பேக்கேஜில் இடம் பெறுபவர்களின் செய்திகள் அதிகமாக வரும் !

தமிழகத்தின் பிரபலமான பத்திரிகைகளான தினமலர், தினகரன், மாலை மலர் மற்றும் மாலை முரசு போன்ற அனைத்து பெரிய பத்திரிகைகளும் இதே வியாபார யுக்தியை கையில் எடுத்துக் கொண்டது !

நிர்வாக ஊழியர்கள் மாவட்ட செய்தியாளர்கள் மூலம் வேட்பாளர்களை சந்தித்து இதுபோன்ற பேக்கேஜ்களை தனியாக பேசி முடிவு செய்வார்கள் !

ஆனால் தற்போது இதுபோன்ற செயல்கள் சென்னை போன்ற முக்கிய நகரங்களில், ஒட்டுமொத்த கட்சி சார்பில் கோடிகளில் பேசி முடிவு செய்யப்படுகிறதாக சொல்லப் படுகிறது !

இதில் இரவு பகலாக செய்திகளை தந்து உழைத்த பத்திரிகையாளர்களுக்கு எந்த பலனும் இல்லை, முக்கியமாக மரியாதையும் இல்லை !

காரணம் நம்முடைய தயவு உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு தேவை இல்லை !

இந்த முறை இதன் வளர்ச்சியாக, பேக்கேஜ் பட்ஜட் உயர்ந்து உள்ளது மட்டுமின்றி, பேக்கேஜில் இல்லாத வேட்பாளர்கள் பற்றிய செய்தியோ, புகைப் படங்களோ இடம் பெறாத நிலை வந்து விட்டது !

சிறிய கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள், மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வரும் தன்னார்வலர்களின் செய்திகள் எதுவுமே பத்திரிகைகளில் 90 % இடம் பெறுவது இல்லை !

செய்தியாளர்கள் அனுப்பும் செய்திகளும் இவர்கள் ஒழுங்காக போடுவது இல்லை, இதனால் கஷ்டப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களால் முடிந்த 200, 300 ரூபாய் வந்து போகும் செலவுகளுக்காக, செய்தியாளர்களுக்கு கவர், கொடுப்பவர்களும் மன வேதனை அடைகின்றனர் !

இந்த பேக்கேஜின் உச்சகட்ட வளர்ச்சி, தகுதியற்றவர்கள், கிரிமினல் குற்றவாளிகள் என்று யாராக இருந்தாலும் அவர்களை தலையில் வைத்து கொண்டாடும் அவலம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது !

இந்த பேக்கேஜ் கலாச்சாரத்தில், கொள்கை, பத்திரிகை தர்மம், ஜாதி, மதம் போன்ற எந்த வகையான கட்டுப்பாடும் இல்லை, பணம் மட்டுமே !

எத்தனையோ நல்ல வேட்பாளர்கள், மக்கள் மத்தியில் தெரியாமலே உள்ளார்கள் !

உண்மை செய்திகள், மக்கள் பிரச்சினைகள்....... இவைகளை கடந்து, விளம்பரங்கள், பேக்கேஜ், பொங்கல் மலர், தீபாவளி மலர்....... இதற்கு ஆள் பிடித்து விளம்பரங்கள் பெற்று, அதை வசூல் செய்து கொடுக்கும் பணிகளுக்கு மட்டுமே இவர்களுக்கு பத்திரிகையாளர்கள் தேவை !

உண்மையான தகவல்களையும் வெளியிட முடியாத நிலையில், மரியாதை தரக்கூட தெரியாத பல அரசியல் தலைவர்கள் நடுவில், நிர்வாகத்திற்கு விசுவாசமாக பணியை செய்து வரும் செய்தியாளர்கள் மிகவும் பாவப்பட்டவர்களே !

இந்த நிலையில், இந்த ஜாம்பவான்களுக்கு நடுவில், சின்ன பத்திரிகைகள் வெளி வருவதிலேயே பல பிரச்சினைகள் !

அப்படி பெரிய அளவில் மத்திய மாநில அரசு விளம்பரங்கள் கூட இல்லாமல், உண்மையான செய்திகளை வெளியிட்டு வரும் சிரிய பத்திரிகைகளுக்கு யாரும் உதவி செய்வது இல்லை !

ஆனால் அது போன்ற பத்திரிகைகளும் இதுபோன்ற வியாபார ரீதியான செயல்களில் ஈடுபட்டால் மட்டுமே பத்திரிகை வெளியே வரும் என்ற நிலை தற்போது வந்துவிட்டது !

இந்த நிலை மாற வேண்டும் !

சிறிய பத்திரிகைகள், மற்றும் செய்தியாளர்கள் பாதுகாக்க பட வேண்டும் !

சமூக வலைதளங்கள் மட்டுமே பல நல்ல வேட்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட உதவுகின்றது !

பத்திரிகை முதலாளிகளும், நிர்வாகங்களும், கட்சிகளுடனும், வேட்பாளர்களுடனும் செய்து கொள்ளும் பத்திரிகை வியாபாரத்தில், பலியாகுவது உழைக்கும் பத்திரிகையாளர்களே !

பெய்டு நியூஸ் கலாச்சாரத்தை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா கையில் எடுத்தது போல, இந்த பேக்கேஜ் நியூஸ் கலாச்சாரத்தை மத்திய தேர்தல் ஆணையம் கையில் எடுக்க வேண்டும் !

இல்லையெனில் பத்திரிகைகளின் மீது உள்ள மக்களின் கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையும் போய்விடும் !

டி.எஸ்.ஆர்.சுபாஷ்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom