Type Here to Get Search Results !

''தற்சார்பு இந்தியா'' திட்டம் மூலம் எதிர்கால இந்தியாவுக்கு அடித்தளமிடுதல்

Not a single bomb blast under PM Modi's watch, says Javadekar a ...

கடந்த ஆறு ஆண்டுகளாக பிரதமர் மோடி இந்த நாட்டை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முதலாவது ஆண்டு இப்போது பூர்த்தியாகி உள்ளது. இந்த ஆண்டுகளில் நிறைய விஷயங்கள் நடந்துள்ளன. மோடியின் பணிகளை மூன்று பாதைகள் கொண்ட செயல்பாடுகளாகப் பார்க்கலாம்.

முதலில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசிய அளவிலான முன்முயற்சிகள். இரண்டாவதாக கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகள். மூன்றாவது விஷயம் ''தற்சார்பு இந்தியா'' திட்டத்தின் மூலம் எதிர்கால இந்தியாவுக்கு அடித்தளம் உருவாக்கி இருப்பது.

அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து, லடாக் மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள் உருவாக்கம், குடிமக்கள் திருத்த மசோதா நிறைவேற்றியது, முத்தலாக் தடைச் சட்டம், ராமர் கோவில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தது ஆகியவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் செயல்பாடுகளாக உள்ளன. அதன் பிறகு காஷ்மீரில் நிலைமை மேம்பட்டிருக்கிறது. இப்போது இன்டர்நெட் வசதியும் கூட அங்கு அளிக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தானின் சதிச் செயல்கள் குறித்து நமது படையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

50 ஆண்டு காலத்துக்கும் மேலாக நீடித்து வந்த போடோ பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு விரிவான ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல, திரிபுரா, மிசோரம் மற்றும் மத்திய அரசுக்கு இடையில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து புரூ-ரியாங் அகதிகள் பிரச்சினையும் வெற்றிகரமாக தீர்த்து வைக்கப் பட்டுள்ளது. ஆறு மாதம் பேறுகால விடுமுறை, மருத்துவ ரீதியில் கருக் கலைப்பு செய்வதற்கான மசோதா 2020, கருத்தரித்தல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா 2020, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம் போன்ற முக்கியமான சமூக செயல்பாடுகளும் இந்த ஓராண்டு காலத்தில் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

கோவிட் நோய்த் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில், நாம் மிக நீண்ட, மிகக் கடுமையான முடக்கநிலை அமல் செய்ததில், பாதிப்புகள் அளவை மிகக் குறைந்தபட்ச அளவில் வைத்திருக்கிறோம். பல விஷயங்களில் நம்மிடம் திறன் வசதிகள் இல்லை. கோவிட் மருத்துவமனைகள் நம்மிடம் இல்லை. இப்போது நம்மிடம் 800க்கும் மேற்பட்ட கோவிட் மருத்துவமனைகள் உள்ளன. கோவிட் நோய்த் தாக்குதல் அறிகுறியைக் கண்டறிய நம்மிடம் ஒரு ஆய்வக வசதி மட்டுமே இருந்தது. இப்போது 300க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில் அந்த வசதி உள்ளது. தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடை (பி.பி.இ.), முகக் கவச உறை, ஸ்வாப் எடுக்கும் குச்சிகள் கூட இறக்குமதி செய்யப்பட்டன. இப்போது வென்டிலேட்டர்களையே இந்தியாவில் தயாரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கிருமிநாசினிகள் உற்பத்தி செய்ய 165 எரிசாராய ஆலைகளுக்கும், 962 உற்பத்தி நிறுவனங்களுக்கும் அனுமதி தரப்பட்டதால், இப்போது 87 லட்சம் லிட்டர் கை கிருமிநாசினி உற்பத்தி செய்யப்படுகிறது.

சுகாதாரத் திட்டங்களின் தொகுப்பிற்கு மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.11 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. கடன் வாங்காமல் இந்தச் சவாலை சந்திக்க இந்தத் தொகை உதவியாக இருக்கும். குடிபெயர்ந்து சென்றிருந்த தொழிலாளர்கள் சுமார் 45 லட்சம் பேரை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல சுமார் 3000 ரயில் சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெற்றிகரமாக வெளியேற்றி அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மக்கள் நலனுக்குத்தான் மோடி அரசு முதல் முன்னுரிமை தருகிறது. முதலில் அறிவித்த தொகுப்புத் திட்டங்களில், 80 கோடி குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி அல்லது கோதுமை, 5 கிலோ பயறு வகைகளை (5 மாதங்களுக்கு) இலவசமாக வழங்கி உணவுக்கான உத்தரவாதத்தை அளித்தார். ஏற்கெனவே இருந்த மானியத்துடன் கூடிய கிலோ ரூ.2-3 என்ற விலையில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டத்தின் தொடர்ச்சியாக இது அமைந்தது. குடும்ப அட்டை இல்லாத சுமார் 5 கோடி பேருக்கு அரசு 10 கிலோ அரிசி அல்லது கோதுமை, 2 கிலோ பயறு வகைகளை இரண்டு மாதங்களுக்கு வழங்கியது. வங்கிகளில் ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் 20 கோடி பெண்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி அளிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1,500 (3 X 500) அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்டுள்ளது. 8 கோடி குடும்பங்களுக்கு, 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.2,000. சுமார் 9 கோடி குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.2,000 செலுத்தப்பட்டுள்ளது. 50 லட்சம் ரெடி-பத்ரிவாலாக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அளிக்கப் பட்டுள்ளது. லட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, கட்டுமானத் தொழிலாளர் நிதியத்தில் இருந்து நிதி கிடைக்கும். நமது சமூகத்தில் அடித்தட்டு மக்கள் 10 சதவீதம் பேருக்கு, குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை கிடைத்துள்ளது.

''தற்சார்பு இந்தியா'' தொகுப்புத் திட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான சீர்திருத்தங்கள், வளர்ச்சியின் மூன்றாவது கோணமாக அமைந்துள்ளது. தற்சார்பு இந்தியாவின் ஐந்து தூண்களாக- பொருளாதாரம், கட்டமைப்பு, முறைமைகள், மக்கள் தொகை மற்றும் தேவை - என்ற அம்சங்கள் உள்ளன. இது ரூ.20 லட்சம் கோடியிலான தொகுப்புத் திட்டங்கள். இது ஜிடிபியில் 10 சதவீதம் ஆகும். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவின் நலனையும் கருத்தில் கொண்டதாக இது இருக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் ஈ.பி.எப். பங்களிப்பு குறைக்கப்பட்டதன் மூலம், ரூ.2760 கோடி பயன் கிடைத்துள்ளது. குறுகிய மற்றும் நடுத்தர காலத்து கடன்களுக்கு வட்டியில் 2 சதவீத சலுகை அளிக்கப் பட்டுள்ளது. 63 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு சொத்து ஜாமீன் இல்லாமல் ரூ.20 லட்சம் வரையில் கடன் உதவி கிடைக்கும். முன்பு இந்த வரம்பு ரூ.10 லட்சமாக இருந்தது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்பதன் வரையறை திருத்தப்பட்டதால், நிறைய நிறுவனங்களுக்குப் பயன் கிடைக்கும். சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கிச் சேவை அல்லாத நிதி நிறுவனங்களுக்கு சேர்த்து ரூ.4,45,000 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. வேளாண் கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி, மீன்வள மேம்பாட்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி, கால்நடைகளுக்குத் தடுப்பூசிகள் மற்றும் கோமாரி சிகிச்சை திட்டங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடனுடன் இணைப்பு ஏற்படுத்திய மானியம் ரூ.70 ஆயிரம் கோடி முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம்.

இந்தத் தொகுப்புத் திட்டங்களில் முக்கியமான சீர்திருத்தங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்பது வரலாற்று முக்கியத்துவமான முன்முயற்சி. நாம் ஆயுதங்களை 100 சதவீதம் இறக்குமதி செய்து வந்தோம். பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தியில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை நாம் அனுமதிக்காமல் இருந்தோம். இந்த பழைய முறையில் இருந்து நாட்டை விடுவித்த மோடி அரசு, பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தியில் 74 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதித்து, அதே சமயத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பாதுகாப்புத் துறைக்கான ஆயுதங்கள் மற்றும் உதிரி பாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்குத் தடையும் விதித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உதவும் என்பதால் அதற்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கி இருப்பது மிகச் சிறந்த முன்முயற்சியாக அமைந்துள்ளது.

குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வரும் போது, ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புக்கு அதிக தேவை இருக்கும் சூழ்நிலையில் இந்த ஒதுக்கீடு சிறப்பானதாக இருக்கும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி காலத்தில் இத் திட்டத்தில் ரூ.37 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகச் செலவிடப்பட்டது கிடையாது. எங்களின் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் சராசரியாக ரூ.55 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளோம். இப்போது ஏறத்தாழ அதை இரட்டிப்பாக்கி ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளோம். மோடியின் அரசு ஏழைகள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. தொழிற்சாலைகளுக்குப் புத்துயிரூட்டவும், வரி செலுத்துவோரை ஊக்குவிக்கவும் பல சலுகைகள் அளிக்கப் படுகின்றன.

கடைசியாக, இந்தத் தொகுப்புத் திட்டங்களின் தலைப்பு வேளாண்மைத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தங்கள் என்பதாக உள்ளது. விவசாயிகள் ஏ.பி.எம்.சி.களின் பிடியில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர். தாங்கள் விரும்பும் எந்த இடத்திலும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்க முடியும். எவருடனும், எவ்வளவு காலத்துக்கும் அவர் வியாபாரத் தொடர்பில் இருக்கலாம். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் விவசாயிகளுக்கு விரோதமான விதிகளில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் தரப்பட்டுள்ளது. சந்தையில் அதிக விலை கிடைக்கும் போது, விவசாயிகள் அதைப் பெறுவதற்கு இனிமேல் எந்தத் தடையும் கிடையாது.

''தற்சார்பு இந்தியா'' தொகுப்புத் திட்டங்கள் இந்தியாவின் எதிர்காலத்தை முடிவு செய்யக் கூடியவையாக இருக்கும். அது உயர் லட்சிய நோக்கங்களைக் கொண்டதாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக, கவனத்துடன் உருவாக்கியதாக இருக்கிறது.

-பிரகாஷ் ஜவடேகர்

கட்டுரையாளர் மத்திய சுற்றுச்சூழல், வனம் & பருவநிலை மாறுதல்கள் துறை; தகவல் ஒலிபரப்புத் துறை; கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் துறைகளின் மத்திய அமைச்சராக உள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom