Type Here to Get Search Results !

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோற்சவம் ரத்து

திருநள்ளாறு கோயிலில் புதிய இந்திர ...திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோற்சவம் நிகழாண்டு ரத்து செய்யப்படுவதாகக் கோயில் நிர்வாகம் புதன்கிழமை அறிவித்தது. காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில், தனிச் சன்னிதி கொண்டிருக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவானைத் தரிசிக்க நாடெங்குமிருந்து பக்தர்கள் வருகின்றனர். வாரத்தில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களையும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களையும் ஈர்க்கும் தலமாக இது விளங்குகிறது.

இக்கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தில் தேரோட்டம், உன்மத்த நடனம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் திரளான பக்தர்களை ஈர்க்கக்கூடியதாகும். நிகழாண்டு வருகிற 27-ஆம் தேதி முதல் கொடியேற்றம் செய்து பிரமோற்சவம் தொடங்கவேண்டிய நிலையில், கரோனா தொற்றால் கோயில்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், பிரமோற்சவம் நடத்துவதற்கான வாய்ப்பும் ஏற்படாத நிலை உருவானது.

இந்நிலையில் நிர்வாக அதிகாரி (கோயில்கள்) எம்.ஆதர்ஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் மற்றும் அந்த தேவஸ்தானத்தைச் சேர்ந்த சார்பு கோயில்களான ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ பிடாரி அம்மன், ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆகிய கோயில்களின் பிரமோற்சவம் சித்திரை மாதம் 14-ஆம் தேதி 27.4.2020 கொடியேற்றத்துடன் தொடங்கி 5.6.2020 தேதியுடன் நிறைவடையவேண்டும்.

இந்த விழா கோயில் சிவாச்சாரியார்கள், பூசாரிகள், ஊழியர்கள், ஸ்தானிகர்கள், வேதஸ்தான 5 கிராமத்தினர் மற்றும் இதர கிராமத்தினர் பங்களிப்புடன் நடத்தப்பெறவேண்டும்.

இதில் அதிகளவில் கூட்டம் வர வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாது பஞ்சமூர்த்திகள் கோபுர வீதியுலா, ஸ்ரீ செண்பக தியாகராஜசுவாமி உன்மத்த நடனம், தேர், ஸ்ரீ சனீஸ்வர பகவான் வீதியுலா உள்ளிட்டவற்றில் கூட்டம் அதிகமாகக் காணப்படும், அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகத்திலிருந்து பக்தர்கள் விழாவில் பங்கேற்கக்கூடும்.

இந்திய அரசால் கரோனா தொற்றைத் தொடர்ந்து பேரிடராக அறிவிக்கப்பட்டு, கோயில்களில் தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டு, 144 பிரிவின்படி ஊரடங்கு தடைச் சட்டம் அமலில் உள்ளபோது, திருவிழா கொடியேற்ற விழா ரத்து செய்யப்படுகிறது.

மேலும், விழாவில் அனைத்து நிகழ்வுகளும் ஆகம விதி, சம்பிரதாயப்படி மாற்ற இயலாத நட்சத்திர நாள் கணக்கிணைக்கொண்டு நடத்தப்பட வேண்டும். எனவே கொடியேற்றம் மற்றும் அதைத்தொடர்ந்த அனைத்து நிகழ்வுகளும் உள்ளடக்கிய நிகழாண்டுக்கான பிரமோற்சவம் ரத்து செய்யப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom