Type Here to Get Search Results !

2030 திட்டத்தின் கீழ் உள்ள சர்வதேச இலக்கு... வெளியிட்ட நிதி ஆயோக்... International Plan Target under the 2030 ... Published by Finance Commission

 

இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடு மற்றும் தகவல் பலகை 2020-21 இன் மூன்றாவது பதிப்பை நிதி ஆயோக் வெளியிட்டது.

நாட்டில் நிலையான வளர்ச்சி இலக்குகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் முக்கிய சாதனமாக இந்தக் குறியீடு விளங்குவதுடன், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இடையே போட்டி மனப்பான்மையையும் ஊக்குவிக்கிறது.

'இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடு மற்றும் தகவல் பலகை: 10 ஆண்டுகால செயலின் கூட்டாண்மை' என்ற தலைப்பிலான அறிக்கையை நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.

'இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டின் மூலம் நிலையான வளர்ச்சி இலக்குகளைக் கண்காணிக்கும் நமது முயற்சி, தொடர்ந்து பரவலாகக் கவனிக்கப்படுவதுடன், உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது.

நிலையான வளர்ச்சி இலக்குகள் மீது மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் குறியீட்டை கணக்கிட்டு, அவற்றை வரிசைப்படுத்தும் தரவுகளின் அடிப்படையிலான அரிய முன்முயற்சியாக இந்த நடவடிக்கை விளங்குகிறது.

இது விருப்பமான மற்றும் முன்மாதிரியான விஷயமாகவும், சர்வதேச அளவிலான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாகவும், திகழும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்', என்று‌ வெளியீட்டு நிகழ்ச்சியின்போது டாக்டர் ராஜீவ் குமார் கூறினார்.

2030-ஆம் ஆண்டில் எட்ட வேண்டிய இலக்குகளுள் மூன்றில் ஒரு பங்கை அடைய வேண்டியுள்ள நிலையில், இந்தக் குறியீட்டு அறிக்கையின் பதிப்பு, கூட்டாண்மையின் முக்கியத்துவத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.

''நிலையான வளர்ச்சி இலக்குகளை முன்னிறுத்திய நடவடிக்கைகளின் போது நாம் கட்டமைத்த வலுவான கூட்டாண்மையை இந்த அறிக்கை பிரதிபலிக்கிறது. ஒருங்கிணைந்த முன்முயற்சிகளால் எவ்வாறு சிறந்த பலன்களையும், மிகப் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது', என்று நிதி ஆயோக்கின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான அமிதாப் கண்ட் கூறினார்.

நிலையான வளர்ச்சி இலக்குகள் நாட்டில் பின்பற்றப்படுவதைக் கண்காணிப்பது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடையே போட்டி மனப்பான்மை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது ஆகிய இரண்டு முக்கியப் பணிகளை நிதி ஆயோக் மேற்கொள்கிறது. 2030 திட்டத்தின் கீழ் உள்ள சர்வதேச இலக்குகளின் விரிவான தன்மை மற்றும் தேசிய முன்னுரிமைகள் இந்த அறிக்கையில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம், கல்வி, பாலினம், பொருளாதார வளர்ச்சி, நிறுவனங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட நீட்டிக்கப்பட்ட இலக்குகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சியை அளவிடும் கணிப்புச் சுவடியாகவும், கொள்கை சாதனமாகவும் இந்தக் குறியீடு செயல்படுகிறது.