Type Here to Get Search Results !

திருக்கோயில் ஊழியருக்கும் ரூ.4,000 உதவித்தொகை..... பூசாரிகளுக்கு உண்டா....?

 

திருக்கோயில்களில் மாதச் சம்பளமின்றிப் பணியாற்றும் அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியார்கள்/ பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு உதவித்தொகை ரூ.4,000, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (மே 31) வெளியிட்ட அறிவிப்பு:

"இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட 36,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன. அவற்றில் சுமார் 34,000 திருக்கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ.10,000-க்கும் கீழ் மட்டுமே ஆகும். 12,959 திருக்கோயில்களில் 'ஒரு கால பூஜைத்திட்டம்' அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2. மேற்கண்ட திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு நிலையான சம்பளம் ஏதும் வழங்கப்படுவதில்லை. கரோனா நோய் பெருந்தொற்று காரணமாக, திருக்கோயில்களில் பக்தர்கள் வருகை இல்லாததால் போதிய வருமானமின்றி, அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியார்கள்/ பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து தவிக்கின்றனர். மேற்கண்ட திருக்கோயில்களின் அர்ச்சகர்கள்/ பட்டாச்சாரியார்கள்/ பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.


3. பக்தர்கள் வருகையின்மையால் திருக்கோயில்களில் மாதச் சம்பளம் இல்லாமல் பணிபுரியும் திருக்கோயில் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்ட நிலையில், திருக்கோயில் ஊழியர்களால் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதியுதவி வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.


திருக்கோயில் ஊழியர்களின் இக்கோரிக்கை முதல்வரது கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. திருக்கோயில் ஊழியர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்த முதல்வர், திருக்கோயில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, திருக்கோயில்களில் மாதச் சம்பளம் பெறாமல் பணியாற்றும் ஒவ்வொரு திருக்கோயில் ஊழியருக்கும் ரூ.4,000 உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கு ஆணையிட்டுள்ளார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


மேலும், இந்த உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் திருக்கோயில் பணியாளர் அல்லாத திருக்கோயிலின் மூலம் உரிமம் பெற்றோருக்கும் வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதன் வாயிலாக, ஆக மொத்தம், சுமார் 14,000 திருக்கோயில் ஊழியர்கள் மற்றும் திருக்கோயில் மூலம் உரிமம் பெற்ற இதர பணியாளர்கள் பயனடைவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினமான ஜூன் மாதம் மூன்றாம் தேதியன்று தொடங்கப்படும் என்பதையும் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்".

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom