Type Here to Get Search Results !

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான ஏழு தமிழர்களை மிக எளிதாக விடுவிக்க சட்டரீதியான புதிய யோசனை



ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான ஏழு தமிழர்களை மிக எளிதாக விடுவிக்க சட்டரீதியான புதிய யோசனைகளை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் முன்வைத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே பெ.மணியரசன் குறித்த யோசனைகளை முன்வைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த முறை ஆட்சி செய்த அ.இ.அ.தி.மு.க அரசின் அமைச்சரவை ஏழு தமிழர்களை விடுவிக்கும் பரிந்துரையை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக 2018ஆம் ஆண்டு அனுப்பி வைத்தார்கள்.

வேண்டுமென்றே இரண்டாண்டுக்கு மேல் அந்தப் பரிந்துரையைக் கிடப்பில் போட்டார், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

அது தொடர்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகு அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க மறுத்தார். குடியரசுத் தலைவர் ஆய்வுக்கு அனுப்பியிருப்பதாகவும் கூறினார்.

சட்டங்களுக்கு உட்பட்ட மாநில அரசின் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்க வேண்டும் என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

அமைச்சரவையின் உதவி மற்றும் அறிவுரைப்படி (Aid and Advise) ஆளுநர் செயல்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1) கூறுகிறது.

ஆனால், இந்தியாவில், அரசமைப்புச் சட்டம் வழங்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளும் தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்பதுதான், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆட்சிகளின் செயல்பாடாக இருந்து வருகிறது.

ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அரசமைப்பு ஆயமும், அடுத்து நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அரசமைப்பு ஆயமும் 'மாநில அரசுகள் பொது மன்னிப்பு வழங்கி சிறையாளிகளை விடுதலை செய்வதற்கு, தங்கு தடையற்ற அதிகாரத்தை அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்குகிறது' என்று தெரிவித்துள்ளன.

இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்பதுபோல் முந்தைய காங்கிரஸ் ஆட்சியும், தற்போதைய பா.ஜ.க ஆட்சியும் நடந்துகொள்வது நியாயமற்ற செயல்.

காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சேயை 14 ஆண்டுகளில் மராட்டிய காங்கிரஸ் ஆட்சி விடுதலை செய்தது. பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த்சிங்கைக் கொலை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்ட பல்வந்த் சிங்கின் தூக்குத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்து, பின்னர் விடுதலை செய்தார்கள்.

இப்படிப்பட்ட தண்டனைக் குறைப்பு உரிமைகள் தமிழர்களுக்கு இல்லை என்பதுதான் மத்திய அரசின் நடைமுறையாக உள்ளது. இவ்வாறான பின்னணியில் ஏழு தமிழர் விடுதலைக்குக் குரல் கொடுத்துவந்த தி.மு.க. தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ளது.

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய உடனடியான மாற்றுச் சட்ட வழிகளைத் தமிழ்நாடு அரசு கையாள வேண்டும். அதற்கு முன்பாக, சிறையாளர்களுக்கு விடுப்பு கொடுக்க இருக்கும் அதிகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பயன்படுத்தி, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, அருப்புக் கோட்டை இரவிச்சந்திரன், இராபர்ட் பயாஸ், செயக்குமார் ஆகிய ஏழு பேரைக் கால வரம்பு வரையறுக்காமல் நீண்டகால விடுப்பில் விடுவிக்க வேண்டும். இதற்கான அதிகாரத்தை `தமிழ்நாடு தண்டனை இடைநிறுத்த விதிகள் – 1982 (The Tamil Nadu Suspension of sentence Rules -1982) பிரிவு 40’ தமிழ்நாடு அரசுக்கு வழங்குகிறது.

கொலை வழக்கொன்றில் பெற்ற தூக்குத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டிருந்த புலவர் கு.கலியபெருமாள் அவர்களுக்கு, இதழாளர் ஒருவர் போட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் காலவரம்பற்ற பரோல் (விடுமுறை) வழங்கிய நிகழ்வைத் தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

மும்பை பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டு, சட்ட விரோத ஆயுதங்கள் வைத்திருந்தார் என்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு இரண்டரை ஆண்டுகள் பரோல் கொடுத்தது மராட்டிய அரசு என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

எனவே, ஏழு தமிழர்களையும் உடனடியாகக் காலவரம்பற்ற விடுப்பில் விடுவிக்குமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

விடுப்பில் வரும் ஈழத் தமிழர்களைத் தங்கவைத்துப் பராமரிக்க முன்வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரிடம் ஒப்படைக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom