Type Here to Get Search Results !

தில்லுமுல்லு செய்து ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது..... எடப்பாடியார்


முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.சுந்தரராஜனை ஆதரித்துப்  பேசியது: திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகின்ற இடமெல்லாம் இந்தத் தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும் என பொய்யான அவதூறான செய்தியை பரப்பி வருகிறார். சங்ககிரியில் இருக்கும் மக்கள் வெள்ளம் கடல் போல காட்சியளிக்கிறது.

எங்கள் பிரசாரத்தை சங்ககிரியில் வந்து பாருங்கள். எங்கள் வலிமை தெரியும். வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அதிமுக உழைப்பால் உயர்ந்த இயக்கம். அதிமுகவை எந்த காலத்திலும் வீழ்த்த முடியாது. திமுகவைப் போல அடிக்கடி கூட்டணி மாறும் கட்சி அதிமுக அல்ல. வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளோம்.

தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான நன்மையைத் தருவேன் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.  பாமக நிறுவனர் ராமதாஸ், சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் ஏற்றம் பெற உழைத்து வருகிறார். மரியாதைக்குரிய வாசன், மத்திய அமைச்சராக இருந்தவர். இவர்கள் உள்பட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து, தமிழகம் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக கூட்டணி அமைந்துள்ளது.

திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. போன தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்க்கவில்லை. ஆனால்  தற்போது சூழ்நிலை மாறிவிட்டதால் வேண்டா வெறுப்பாக இழுத்து பிடித்து காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.

சங்ககிரியை பொருத்தவரை லாரித் தொழில், நெசவுத் தொழில், விசைத்தறித் தொழில் ஆகியவற்றால் நிறைந்தது. உழைப்பால் உயர்ந்தவர்கள் இங்கு உள்ளனர். விவசாயியைப் போல லாரி தொழிலாளர்களும்  கண்விழித்து உழைக்கின்றனர். இந்தத் தொழில் ஏற்றம் பெற அதிமுக என்றைக்கும் பக்கபலமாக இருக்கும். நான் உங்களுடன் தொடர்ந்து இருக்கிறேன். எம்.எல்.ஏவாக, எம்.பியாக பணியாற்றி உள்ளேன்.

நான் எம்.பி.யாக சங்ககிரி மக்களே காரணம். மகுடஞ்சாவடி ஒன்றியம் நான் முதன்முதலில் எம்.எல்.ஏ வாக காரணம். உங்களது உழைப்பால், நான் உயரிய பதவிக்கு வந்துள்ளேன். இந்த வளர்ச்சி, ஏற்றம், புகழ் அனைத்தும் உங்களையே சாரும். நீங்கள் உழைத்த உழைப்பால், பதவிகளைப் பெற்றுள்ளேன். 

இதனை எந்தக் காலத்திலும் மறக்க மாட்டேன். தொண்டைக் கட்டி விட்டது. தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து விட்டேன். தமிழகத்தில் எத்தனையோ மாவட்டங்கள் இருந்தாலும், முதலமைச்சர் மாவட்டம் என்ற பெருமை சேலம் மாவட்டத்திற்குத்தான் உள்ளது.

முதலமைச்சரை பார்ப்பது எளிதல்ல. ஆனால் என்னை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். இந்தப் பகுதியில் எல்லா இடங்களுக்கும் நான் சென்று வந்தவன். மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களையும் நன்கு அறிந்தவன். அப்படிப்பட்ட நான் முதலமைச்சரானது உங்களுக்குப் பெருமை.

எனவே, இந்தப் பகுதியைச் சேர்ந்த முதலமைச்சரானால், நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். சங்ககிரியை முழுமையாக அறிந்தவர் முதலமைச்சரானால் உங்களுக்கு அதிக அளவில் நன்மை செய்ய முடியும். அதிமுக பொதுக்குழு மூலமாக, துணை முதலமைச்சர்,என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின், மற்றும் அவரது கட்சித் தலைவர்கள் பெண்களை இழிவாக, அவதூறாக கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்கள். இதனை வாடிக்கையாக கொண்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால், அடாவடி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் வந்துவிடும். மாமூல் கொடுக்க நேரிடும். அது போன்றதொரு நிலை அதிமுக ஆட்சியில் இல்லை. 

திமுக என்றால் அராஜக கட்சி என மக்கள் மனதில் பதிந்து விட்டது. திண்டுக்கல் லியோனி கேவலமான வார்த்தைகளால் பெண்களை வர்ணிக்கிறார். தயாநிதிமாறன் பிரதமரை, ஜெயலலிதாவை அவதூறாக பேசுகிறார். இதற்கெல்லாம், தகுந்த பதிலடியை பொதுமக்கள் வழங்க வேண்டும். 10 ஆண்டுகாலம் வனவாசத்தில் இருந்த திமுக கடும் பசியில் இருக்கிறது.

எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொஞ்சம் கவனம் குறைந்தால் கூட தில்லுமுல்லு செய்து ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது. இந்தத் தேர்தல் மூலம் திமுகவை விரட்டியடிக்க வேண்டும். எதிரிகளை தேர்தல் எனும் போர்க்களத்தில் வீழ்த்த வேண்டும்.

இப்போதே முதலமைச்சர் போல ஸ்டாலின் அதிகாரிகளை மிரட்டுகிறார். ஆட்சியில் இல்லாதபோது இவ்வளவு அராஜகம் செய்பவர், ஆட்சி அதிகாரம் கொடுத்தால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா. நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து வந்துவிடும். கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு.

குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் நூற்றுக்கு 49 பேர் உயர்கல்வி பயில்கின்றனர். இது எதுவும் ஸ்டாலினுக்குத் தெரியாது. நாங்கள் புள்ளி விவரத்துடன் கூறுகிறோம். அதை மறுத்துப்பேசலாம். ஆனால், எதுவும் செய்யவில்லை என்று கூறக்கூடாது.

சங்ககிரி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கியுள்ளோம். புதிய கூட்டுக்குடிநீர்திட்டத்தில் மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்கு தண்ணீர் வழங்கப்படும். தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 41 சதவீதம் பேர் பயில்கின்றனர். எதிர்க்கட்சி, பொதுமக்கள் கோரிக்கை வைக்காத நிலையில், ஏழை எளிய மாணவர்கள் மருத்துவர்கள் ஆகும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 

அடுத்த கல்வி ஆண்டில் ஏழை எளிய குடும்பங்களைச் சேரந்த 600 பேர் மருத்துவர் ஆகும் நிலையை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. மேட்டூர் அணை உபரிநீர்த்திட்டம் மூலம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீர்நிரப்பப்படும்.  

சங்ககிரியில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. அத்திட்டத்தின் மூலம் சங்ககிரியில் குடிநீர் தட்டுப்பாடின்றி தன்னிறைவு பெறும் அதே போல் இடங்ணசாலை பகுதிகளும் மகுடஞ்சாவடி கூட்டு குடிநீர் திட்டத்துடன் சேர்க்க உள்ளது. சங்ககிரியில் லாரி தொழில் அதிகமாக உள்ளது. ஒரு லாரியை பாடி கட்டுவது முதல் அனைத்து வேலைகளையும் ஒரே இடத்தில் நடைபெற ஆட்டோ நகர் அமைக்கப்படும் என்றார்.

மேலும் அவர்  தாரமங்கலம், மகுடஞ்சாவடி, இடங்கணசாலை, சங்ககிரி பகுதிகளில் விசைத்தறி தொழில்கள் அதிகமாக உள்ளன  விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த  நல வாரியம் அமைக்கப்படும் என்றார். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் அம்மா மினி கிளினிக் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களுக்கான அரசாக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.அதிமுக தேர்தல் அறிக்கை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர், வாஷிங்மெசின், மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி, 6 சவரனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி, ரேஷன் பொருட்கள் வீடு தேடி கொண்டு வந்து தரப்படும், கேபிள் இணைப்பு இலவசம், முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், மாற்றுத் திறனாளி உதவித் தொகை உயர்த்தப்படும், புதியதாக ஆட்டோ வாங்க ரூ.25 ஆயிரம் வழங்கப்படும், நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படும்.

நிலமும், வீடும் இல்லாத அனைத்து மக்களுக்கும் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். ஆதி திராவிட மக்கள், அருந்ததியின மக்களின் வீடுகள் பழுதடைந்திருந்தால் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். நகர்ப்புறத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உருவாக்கப்படும் என்றார் அவர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom