Type Here to Get Search Results !

அதிமுக தலைமையிடம் இருந்து சென்ற "தூது"...... சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு....!

 

அதிமுக தலைமையிடம் இருந்து சென்ற "தூது" பலன் அளித்ததன் காரணமாகத்தான் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிர அரசியலில் ஈடுபடும் முன்னேற்பாடுடன் பெங்களூரில் இருந்து சென்னை வந்த சசிகலா, திடீரென நேற்று முன்தினம் இரவு அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக ஒரு அறிக்கை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர்.

பெங்களூரிலிருந்து சென்னைக்கு 23 மணி நேரம் பயணம் செய்து.. பெரும் தொண்டர் கூட்டத்தை திரட்டி அவர்களுக்கு அரசியல் உற்சாகத்தைக் கொடுத்த சசிகலா, திடீரென தனது முடிவை மாற்றிக் கொள்ள என்ன காரணம் என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

மிரட்ட முடியாது

தன்னை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என்று பெங்களூரில் இருந்து சென்னை வந்த போது திட்டவட்டமாக தெரிவித்தவர் சசிகலா. எனவே அவரை வெளியில் இருந்து யாரும் அடிபணிய வைத்து இருக்க முடியாது என்று அனைத்து தரப்பினரும் அடித்துச் சொல்லி வருகிறார்கள். அது உண்மைதான் என்பது போல ஆங்கில நாளிதழில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதோ அதன் சாராம்சம்.

தூது செல்வதில் வல்லவர்

சசிகலாவிடம் அதிமுக தலைமை ஒருவரை தூது அனுப்பியுள்ளது. தூது சென்ற பிரமுகர் டெல்லி பாஜக தலைமைக்கு ரொம்பவும் நெருக்கமானவர். இதுபோல தூது செல்வதில் நிபுணர். இவர் சசிகலாவின் உறவினர் ஒருவர் மூலமாக சசிகலாவிடம் தூது சென்றுள்ளார். அந்த உறவினர் அரசியலில் சம்பந்தம் இல்லாதவர் விலகி இருக்கக் கூடியவர். அந்த உறவினர் துணையால் சசிகலாவிடம் இந்த தூதர் பேச முடிந்துள்ளது.

அதே மாதிரி கட்டுப்பாடு

அப்போது அதிமுக தலைமை கூறிய தகவல்களை சசிகலாவிடம் எடுத்து வைத்துள்ளார் அந்த தூதர். எப்படி நீங்கள் கட்சியை விட்டுச் சென்றீர்களோ, அதேபோலத்தான் இப்போதும் கட்சி இருக்கிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக சில விட்டுக் கொடுத்தல்கள் நடைபெற்றது உண்மை தான். அதைச் செய்யாவிட்டால் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும். இடையில் பிரச்சனை செய்தது டிடிவி தினகரன்தான். அவர் அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் களம் காணாமல் இருந்திருந்தால், இப்போது எல்லாம் சுமுகமாக நடைபெற்று முடிந்து இருக்கும், என்று எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது.

வாரிசு அரசியல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளராக, உங்கள் சகோதரியின் மகன் தினகரன் இருக்கிறார். அதற்கு ஆதரவாக நீங்கள் செயல்பட்டால், திமுகவை வாரிசு அரசியல் என்று அதிமுக மற்றும் பாஜக சேர்ந்து செய்யும் பிரச்சாரம் எடுபடாமல் போய்விடும். எனவே, நீங்கள் தினகரனுக்கு ஆதரவு கொடுக்கக்கூடாது. வாரிசு அரசியலுக்கு எதிராக பேசியவர் ஜெயலலிதா. இப்போது அதே வாரிசு அரசியலை நீங்கள் கையில் எடுத்தால், அதை, அதிமுக தொண்டர்கள் விரும்பமாட்டார்கள். இவ்வாறு அந்த தூதர் சசிகலாவிடம் கூறியுள்ளார்.

கவுரவம் தேடி வரும்

தேர்தல் முடியும் வரை சற்று ஒதுங்கியே இருங்கள்.. அதற்கு பிறகு உங்களுக்கு உரிய மரியாதை தேடிவரும். தினகரன், திமுகவுடன் சேர்ந்து கொண்டு அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று தான் வேலை செய்து வருகிறார். தினகரனுக்கு நீங்கள் ஆதரவாக இருந்தால் இந்த முயற்சிக்கு நீங்களும் துணை போனது போல மாறிவிடும். ஒருவேளை அதிமுக தோற்றால், நீங்கள் ஒரு காரணம் என்பதுபோல தீராத பழி உங்களுக்கு ஏற்பட்டுவிடும். எனவே, இப்போதைக்கு ஒதுங்கியே இருங்கள். தேர்தல் முடிந்து முடிவுகள் எதுவாக இருந்தாலும், இணைப்பு சாத்தியப்படும். இவ்வாறு அந்த தூதர் எடுத்துக் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெற்றி பெற்ற தூது

இந்த நிலையில்தான், சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்துள்ளார். அதேநேரம், அவர் தனது அறிக்கையில், அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவிக்கவில்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது, இந்த தூது விஷயத்தில் நடைபெற்ற பல விஷயங்கள் அவர் மனதில் இருந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom