அமமுகவை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும்.... அதிரடி உத்தரவு

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் தேதி வெளியானதால் அரசியல் கட்சி தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையில் வேகமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதற்காக பாமகவிற்கு 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தானது. பாமகவைப் போல் தங்களுக்கும் 23 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அடம்பிடிப்பதால் தேமுதிக - அதிமுக இடையே இழுபறி நீடித்து வருகிறது. ​கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோர் நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேசினர்.

இரவு 10:00 மணிக்கு துவங்கிய சந்திப்பு, நள்ளிரவு 1:00 மணிக்கு நிறைவடைந்தது. அப்போது, பா.ஜ.க, தரப்பில் 40 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., தரப்பில் 18 தொகுதிகள் தருவதாக கூறப்பட்டு, பின் 20 ஆக உயர்த்தி உள்ளனர். தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்ட போதும் எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கொங்கு மண்டலத்திலும், தென் மாவட்டங்களிலும், அ.தி.மு.க.,விற்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை, பா.ஜ., கேட்டதாக கூறப்படுகிறது.

இதில், இழுபறி ஏற்பட்டுள்ளது. மேலும், கூட்டணியில், அ.ம.மு.க.,வை சேர்க்க, அமித்ஷா வலியுறுத்தியதாகவும், தகவல் வெளியானது. ​ அமமுகவை அதிமுகவுடன் இணைக்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களை கூட்டணியிலாவது இணைத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என சொல்லிவிட்டாராம். இதற்கு எடப்பாடியார் சற்றும் பிடிகொடுக்கவில்லையாம். அதனால் டெல்லி சென்ற அமித் ஷா தமிழக தலைவர்களிடம், அதிமுக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அமமுக நிலைப்பாடு பற்றி கேளுங்கள். மார்ச் 5 வரை அவர்களுக்கு அவகாசம், அதன் பிறகே பாஜக என்ன முடிவு எடுக்கும் என்பது குறித்து தெரிவிக்கப்படும் என கூறியுள்ளாராம். இதுகுறித்து முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a comment

0 Comments