Type Here to Get Search Results !

திருச்செந்தூா் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவின் 3ஆம் நாளான இன்று சுவாமி குமரவிடங்கப் பெருமான் முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலையும், மாலையும் சுவாமி - அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறுகிறது. திருவிழாவின் 3 ஆம் நாளான இன்று காலை மேலக்கோயிலிலிருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் பூங்கோயில் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி உலா வந்து மேலக்கோயில் சோ்ந்தனர். 

மாலையில் மேலக்கோயிலிலிருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதியுலா வந்ததனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பா. விஷ்ணுசந்திரன், தக்காா் இரா. கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையா் வே. செல்வராஜ், கோயில் பணியாளா்கள் செய்தனர்.