Type Here to Get Search Results !

பட்டியலின வெளியேற்றமே இறுதித் தீர்வு... அதிமுக -பாஜகவுக்கு செக் வைக்கும் டாக்டர்.கிருஷ்ணசாமி..!


குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து, அந்த மக்கள்`தேவேந்திர குல வேளாளர்’ என அறிவிக்கப்படுவார்கள் என்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

 இந்தநிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கவும், அந்த மக்களை தற்போது இடம்பெற்றுள்ள பட்டியல் பிரிவிலிருந்து நீக்கவும் கடந்த 25 வருடங்களாக புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தியது. எங்களின் கோரிக்கைக்காக, புதிய தமிழகம் கட்சி சார்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். தற்போது `தேவேந்திர குல வேளாளர்’ என்று அழைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதேசமயம், `தேவேந்திர குல வேளாளர்’ என்று அழைப்பதுடன், பட்டியல் பிரிவிலிருந்தும் நீக்க வேண்டும். இதுதான் எங்களது பிரதான கோரிக்கை. அதை முன்வைத்தே தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவந்தோம். வறுமையை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு ஆங்கிலேயர்கள் தவறாக, தேவேந்திர குல வேளாளர்களை தாழ்த்தப்பட்ட பிரிவில் இணைத்துவிட்டார்கள். அதனால், ஒரு சதவிகிதம் படித்த இளைஞர்கள் கல்வி மற்றும் வேலையில் வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட்டதால் எங்கள் மக்களின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் பெரும்பான்மையான மக்களின் முன்னேற்றம் தடைப்படுகிறது. அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும்கூட மலிவாகப் பார்க்கக்கூடிய சூழல் இருக்கிறது. முன்னேற்றம் தடைப்படுவதால்தான், தங்கள் பெயரை மாற்றிக் கொடுத்தால் மட்டும் போதாது; பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மக்களின் பிரதான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். பெயர் மாற்றத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மத்திய அரசு மசோதா தாக்கல் செய்திருப்பது தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. எனவே, அவர்கள் பட்டியல் பிரிவிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற திருத்தத்தையும் மசோதாவில் கொண்டு வர வேண்டும்.

எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, இ-மெயில் மூலமாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்குக் கடிதம் அனுப்பவிருக்கிறோம்.  பட்டியல் இனத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கியப் பணியாக இருக்கிறது. அதன் பிறகே சட்டமன்றத் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். பட்டியல் இனத்திலிருந்து நீக்கிவிட்டால் தேர்தலில் பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டு அதிக அரசியல் அதிகாரம் பெறுவோம்” என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom