Breaking

6/trending/recent
Type Here to Get Search Results !

வெற்றியை நிர்ணயிக்கும் சிறுபான்மையின வாக்குகள்... வேலூர்....!


இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி (1806) உள்ளிட்ட பல வரலாறுகளைத் தாங்கி நிற்கும் கம்பீரமான கோட்டையையும், நூற்றாண்டு விழா கண்ட சிஎம்சி மருத்துவமனையையும் அடையாளமாகக் கொண்டுள்ளது வேலூர் சட்டப்பேரவைத் தொகுதி. திமுகவை தொடங்க முதன்முதலில் அச்சாரமிட்ட வேலூர், தந்தை பெரியாருக்காக தனது இறுதிக் காலத்தை அர்ப்பணித்த மணியம்மையை பெற்ற பெருமைக்குரிய தொகுதியாகவும் விளங்குகிறது.

தொழில்

தற்போது நசிந்து வரும் பீடித் தொழில்தான் வேலூரில் மிக முக்கிய உற்பத்தித் தொழிலாக இருந்துள்ளது. இந்தத் தொழிலை நம்பி இப்போதும் சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்றுள்ளன. தவிர, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு மையமாக விளங்கும் வேலூரில் ஹோட்டல், மொத்த வணிகம் பிரதானமாகும்.

கடந்த தேர்தல்கள்

வேலூர் மாநகராட்சியை உள்ளடக்கிய இந்த தொகுதி 1952 ஆம் ஆண்டு முதல் 15 சட்டப்பேரவை தேர்தல்களை சந்தித்துள்ளது. இத்தொகுதியில் இரட்டை உறுப்பினர் அடிப்படையில் முதல் சட்டப் பேரவை உறுப்பினர்களாக மாசிலாமணி, ஜெகன்நாதன் (காங்கிரஸ்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து 1957-இல் எம்.பி.சாரதி (சுயேட்சை), 1962-இல் ஆர்.ஜீவரத்தினம் (காங்கிரஸ்) ஆகியோரும், 1967, 1971-இல் எம்.பி.சாரதி (திமுக), 1977-இல் ஏ.கே.ரங்கநாதன் (அதிமுக), 1980, 1984, 1989-இல் வி.எம்.தேவராஜ் (திமுக), 1991, 1996, 2001, 2006-இல் சி.ஞானசேகரன் (காங்கிரஸ்) (1996-இல் மட்டும் தமிழ் மாநில காங்கிரஸ்), 2011-இல் வி.எஸ்.விஜய் (அதிமுக), 2016-இல் ப.கார்த்திகேயன் (திமுக) ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிரச்னைகள்

வேலூர் மாவட்டத்தின் தலைநகர் தொகுதியான வேலூர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பயணத்தில் ஓய்வெடுக்கும் நகரமாக உள்ளது. தவிர, கல்வி, மருத்துவம், சுற்றுலா என இந்நகருக்கு வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் வேலூர் தொகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்கு தீர்வு காண வேலூர் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்ற பல ஆண்டுகால கோரிக்கைக்கு இப்போதுதான் அடித்தளமிடப்பட்டுள்ளது.

மாநகரத் தெருக்களில் நிலவும் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை குறைபாடுகள், பழைய பெங்களூரு சாலையில் ரயில்வே மேம்பாலம், காட்பாடி - சத்துவாச்சாரி இடையே பாலாற்றின் குறுக்கே பாலம், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உயர்மட்ட பாலங்கள், நேதாஜி மார்க்கெட் விரிவாக்கம், ரௌடிகள் தொல்லை, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போக்குவரத்து அதிகரிப்பு போன்றவை பிரதான பிரச்னைகளாகும்.

5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பொலிவுறு நகர் திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு புதிய பேருந்து நிலையம் விரிவாக்கம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் இணைப்பு, சட்டஒழுங்கு பிரச்னையை தவிர்க்க குண்டர் தடுப்புச் சட்டத்தில் அதிகளவில் நடவடிக்கை, மக்கள் கூடும் முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா அமைப்பு போன்றவை கடந்த 5 ஆண்டுகளில் செய்யப்பட்ட முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.

சாதி வாக்குகள்

வேலூர் சட்டப்பேரவையை பொருத்தவரை சுமார் 35 சதவீத அளவுக்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வாக்குகளும், 20 சதவீத அளவுக்கு முதலியார் வாக்குகளும், சுமார் 10 சதவீத அளவுக்கு வன்னியர் வாக்குகளும், நாயுடு உள்பட பிற சாதியினர், பிற மாநிலத்தவர்கள் 35 சதவீத அளவுக்கு உள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலவரம்

திமுக, அதிமுக கட்சிகளுக்கு சமபலத்தில் வாக்குகள் கொண்ட தொகுதியாக உள்ளது என்றாலும், இவ்விரு கட்சியில் முதலியார் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால் அந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது. நகர்பகுதியாக இருப்பதால் முதன்முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிட வாய்ப்புள்ளது.

Post a comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad