Type Here to Get Search Results !

எங்களிடம் 1 கோடி வாக்குகள் உள்ளது....! எடப்பாடியாரையே மிரட்டி பார்க்கும் தனியார் பள்ளிகள்....!


9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் அறிவித்த நிலையில் அந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு நர்சரி,  பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த கல்வியாண்டின் பெரும்பாலான நாட்கள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தேர்வின்றி 100% தேர்ச்சி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்தார். தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், மாணவ, மாணவிகளின் அறிவுத்திறன் மற்றும் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தினர் 500 க்கும் மேற்பட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பள்ளிகளைத் திறக்கவும், தேர்வுகளை நடத்தவும் வலியுறுத்தி தனியார் பள்ளிகள் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார், 110 விதியின் கீழ் முதலமைச்சர் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்திருப்பது தங்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையும் அளித்திருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த அறிவிப்பால் மாணவர்களின் கல்வித் தரமும், வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படும் எனவும் மாணவர்களின் உயர் படிப்புகள் குறித்த எதிர்காலக் கனவுகள் கேள்விக் குறியாக மாறும் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக அரசின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டதாக கூறய ஆவர், இந்த ஆண்டும் அதே அறிவிப்பை வெளியிட்டால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், தேர்வுக் கட்டணத்தை வசூலித்து மாதிரி வினாத் தாள்கள் தயாராக்கி, மாணவர்களும் தேர்வுக்கு தயாராக உள்ள நிலையில் அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற அறிவிப்பை வெளியிடுவதில் ஞாயமில்லை எனவும் அவர் கூறினார். மேலும், ஏற்கனவே 10 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் அதுபோன்ற சூழ்நிலையை உருவாக்கினால் ஆசிரியர்களும் வேலையின்றி அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என தெரிவித்த அவர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றார்.  

அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் அரசு தங்களிடமும் 1 கோடிக்கும் மேல் வாக்குகள் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது எனவும், அடுத்து யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி தங்களிடகும் உண்டு என்பதை அரசு கருத்தில்கொண்டு செயல்படவேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காத பட்சத்தில் வரும் திங்களன்று அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும், ஆட்சியர் அலுவலகங்களிலும் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom