Type Here to Get Search Results !

உள்ளாட்சித் தேர்தல்களுக்கு இந்த அளவு விறுவிறுப்பான பா.ஜ.க பிரச்சாரத்தைத் தெலுங்கானா கண்டதில்லை



உள்ளாட்சித் தேர்தல்களுக்கு இந்த அளவு விறுவிறுப்பான பிரச்சாரத்தைத் தெலுங்கானா கண்டதில்லை. GHMC என்றழைக்கப்படும் ஹைதராபாத் கார்ப்பரேஷனுக்கு இந்த முறை நடக்கும் தேர்தல்களுக்கு தேசிய அளவில் பெரும் கவனம் கிடைத்து வருகிறது.

இதற்கு முக்கியக் காரணம் பா.ஜ.க தனது பெருந்தலைகளான, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க தலைவர் J.P. நட்டா மற்றும் பா.ஜ.க இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா உட்பட பல மூத்த தலைவர்களையும் மத்திய அமைச்சர்களையும் பிரச்சாரத்திற்காக தெலுங்கானாவில் இறக்கி உள்ளது தான்.

ஹைதராபாத் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு பா.ஜ.க பெரும் முக்கியத்துவம் கொடுத்து வருவதால், வேறு வழியின்றி அதில் போட்டிக் கட்சிகளாக இருக்கும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, AIMIM கட்சியும் கூட தங்களுடைய பிரச்சாரத்தை மேம்படுத்தும்படி கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இத்தேர்தலில் 150 வார்டுகள் உள்ளன. அதில் கிட்டத்தட்ட 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த முறை நடந்த தேர்தல்களில்150 வார்டுகளில் 99 இடங்களில் டிஆர்எஸ் வெற்றி பெற்றது. 44 இடங்களில் AIMIM, பா.ஜ.க 4 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது.

ஆனால் இந்த முறை பா.ஜ.க மிகவும் வித்தியாசமானது. வளர்ந்து வரும் கட்சியான பாஜக 2023 சட்டசபை தேர்தல்களிலும், 2024 லோக்சபா தேர்தல்களிலும் டிஆர்எஸ் விட முன்னணியில் இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் செயல்படுகிறது. கடந்த வருடம் முதலே எதிர்க்கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக 17 லோக்சபா சீட்டுகளில் நான்கை வெற்றி பெற்றது.

மிகவும் முக்கியமான நிஜாமாபாத் லோக்சபா தொகுதியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளான கவிதாவை தோற்கடித்து வெற்றி பெற்றது அங்கே பலரையும் அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்திற்கும் உள்ளாகியது. மிகவும் சமீபத்தில், டுபாக்கா சட்டமன்ற இடைத் தேர்தலில் TRS ஐ வீழ்த்தி பா.ஜ.க வெற்றி பெற்றது.

தென்மாநிலங்களில் கர்நாடகாவிற்குப் பிறகு, கைப்பற்றும் மாநிலங்களில் தெலுங்கானாவை முன்னணியில் வைத்துள்ளது பா.ஜ.க. மிகவும் புத்திசாலித்தனமாக ஹைதராபாத்தில் AIMIMற்கு எதிரான ஓட்டுக்களை தன்பக்கம் இழுக்க முயற்சிக்கிறது. இது 2023 சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான இறுதி யுக்தியாகவும் இருக்கலாம்.

இதுவரை AIMIM, TRS முறையான கூட்டணிகளாக இல்லாவிட்டாலும், தங்களுக்குள்ளே எழுதப்படாத ஒரு ஒப்பந்தத்தை பின்பற்றி வந்தனர். பா.ஜ.கவின் மிகவும் தீவிரமான பிரச்சாரத்திற்கு, ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

பா.ஜ.கவின் இளைஞர் அணித் தலைவரான தேஜஸ்வி சூர்யா, ஹைதராபாத் முழுவதும் தேர்தல் பேரணிகளை நடத்தி வருகிறார். அவர் AIMIM தலைவர் அசாவுதீன் ஓய்வாசியை நவீன காலத்து முகமது அலி ஜின்னா என்றும், ஹைதராபாத்தை 'ஹைதராபாத் பாகிஸ்தான்' ஆக AIMIM மாற்ற விரும்புவதாகவும் குற்றம்சாட்டினார்.

ஹைதராபாத்தில் சட்டவிரோதமாக வாழ்ந்துவரும் பாகிஸ்தானியர்கள், பங்களாதேஷிகள், ரோஹிங்யாக்கள் வாக்குகளை AIMIM நம்பி வருவதாகவும் குற்றம் சாட்டினார். TRSஉம் இதற்கு ஆதரவு அளிப்பதாக பா.ஜ.க மேலும் தாக்குகிறது.

அனல் தெறிக்கும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாமல் டிஆர்எஸ் பின் வாங்கும் நிலையில் உள்ளது. பா.ஜ.கவின் உயர்மட்ட பிரச்சாரம், பலவழிகளில் அமித் ஷா மற்றும் நரேந்திர மோடியின் கீழ் பா.ஜ.க பின்பற்றும் தேர்தல் யுக்திகளை ஒத்து செல்கிறது.

உள்ளாட்சி தேர்தல் ஆக இருந்தாலும் சரி, புது பகுதிகளில் கால்தடம் பதிக்க பா.ஜ.க எந்த வாய்ப்பையும் நழுவ விடுவது இல்லை. இதையே தான் நாம் திரிபுராவில் கண்டோம். எங்கும் இல்லாமல் இருந்த பா.ஜ.க ஆளும் கட்சியானது. தற்பொழுது இதுதான் மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்த வருட சட்டமன்ற தேர்தலுக்கு தன்னுடைய கோட்டையை காப்பாற்றிக்கொள்ள மம்தா பானர்ஜி பெரும் முயற்சி செய்து வருகிறார்.

ஒடிசாவிலும் கூட பா.ஜ.க, ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளத்திற்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கியுள்ளது. 2017 உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. அங்கேயும் கூட பா.ஜ.க மூத்த தலைவர்களை பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்தது. இதே தான் ஹைதராபாத்தில் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பா.ஜ.கவுக்கு,தெலுங்கானா 2023 தான் மேற்கு வங்காளத்தின் 2021. தெலுங்கானாவில் பா.ஜ.கவை விரிவுபடுத்த பல ஆண்டுகளாக அமித் ஷா திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தான் அமித்ஷாவின் P to P மாடல். அதாவது "பஞ்சாயத்து முதல் பார்லிமென்ட் வரை". முறையாகவும் தீவிரமாகவும் அடித்தளத்திலிருந்து சீட்டுகளை கைப்பற்றி மேல் மட்டத்திற்கு செல்வது. இம்முயற்சி தெலங்கானாவில் பலனளிக்குமா என்பது இன்னும் நான்கைந்து நாட்களில் தெரிந்துவிடும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom