Type Here to Get Search Results !

'பாலு நினைவுடனேயே இருப்பேன்': கே.ஜே.யேசுதாஸ் உருக்கம்



நான் என்றும் பாலு நினைவுடனேயே இருப்பேன் என்று பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உருக்கமாக கூறியுள்ளார்.

மறைந்த எஸ்.பி.பி., குறித்து அவர் மேலும் கூறியதாவது, ‛என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில், பாலு என் உடன்பிறந்தவர் போன்றவர். பாலு என்னை எவ்வளவு நேசித்தார் என்பது, எனக்கு தெரியாது. ஆனால், அண்ணா என்று அவர் கூப்பிடும்பொழுது, ஒரு அம்மா வயிற்றில், நாங்கள் பிறக்கவில்லையே என்றே தோன்றும். கூட பிறந்தவர் போல் பழகியவர். முன் ஜென்மத்தில் நானும், எஸ்.பி.பி.,யும் சகோதரர்களாக இருந்திருக்கலாம்.

பாலு முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும், அவருடைய சங்கீத ஞானம் பெரிய அளவில் இருக்கும். பாட்டு பாடவும் செய்வார், உருவாக்கவும் செய்வார்.சங்கராபரணம் படத்தில், முறையாக சங்கீதம் கற்றவருக்கு இணையாக பாடியிருப்பார்; அதை கேட்டால் யாரும், இவர் சங்கீதம் கற்கவில்லை என, கூறமாட்டார்கள்.இரண்டு பேருடைய குடும்பமும், நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். சிகரம் படத்தில் அவர் பாடிய, 'அகரம் இப்போ சிகரம் ஆச்சு...' என்ற பாடல், எனக்கு பரிசாக பாடியதாக, பாலு கூறினார். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. யாரையும் புண்படுத்தமாட்டார். கூட இருக்கும் எல்லோரையும் அன்பாகவும், ஆதரவாகவும் பார்த்துக் கொள்வார்.

பாரிஸ் நகரில் நாங்கள் தங்கிய போது சாப்பாடு கிடைக்கவில்லை. அப்போது பாலு, 'ரூம் சர்வீஸ்...' என, குரல் மாற்றி கிண்டல் செய்தார். பின் அனைவருக்கும், அவரே சமைத்து பகிர்ந்தார். அவ்வளவு பசியில் இருந்த எங்களுக்கு, அந்த சாப்பாடு ருசியாக இருந்தது; எல்லோரும் வயிறார சாப்பிட்டோம்.நாங்கள் கடைசியாக பாடியது ஒரு சிங்கப்பூர் நிகழ்ச்சியில் தான். பாலு குணமாகி எப்போது வீடு திரும்புவார் என்று எண்ணி, நான் அமெரிக்காவில் காத்துக் கொண்டிருந்தேன்.

இந்த கொரோனாவால், நமக்கு ஒரு பெரிய இழப்பு நடந்துள்ளது. நான் அமெரிக்காவில் இருந்து, இந்தியா வர அனுமதி இல்லை. என்னால் அவரை பார்க்க முடியவில்லை என, ஒரு பக்கம் வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும், மேடையில், நானும், பாலுவும் ஒரு ஓரமாக சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்து விட்டு, அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க, என் மனம் தாங்காது; என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்.' இவ்வாறு அவர் கூறினார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom