Type Here to Get Search Results !

மிக ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன் : அனில் அம்பானி வாக்குமூலம்



''நான் ஆடம்பரமாக வாழ்வதாக ஊடகங்கள் யூகத்தில் கூறுவது தவறு; மிக ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்'' என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் 69 லட்சம் கோடி ரூபாய் கடனை மறுசீரமைக்க சீனாவைச் சேர்ந்த மூன்று வங்கிகளிடம் 51 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தன. இதற்கு அனில் அம்பானி தனிப்பட்ட உத்தரவாதம் அளித்திருந்தார். இந்த கடனை திரும்பத் தராததால் அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கக் கோரி சீன வங்கிகள் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கில் தனக்கு தனிப்பட்ட சொத்துக்கள் எதுவும் இல்லை என அனில் அம்பானி தெரிவித்திருந்தார்.

இதை ஏற்க மறுத்த வங்கிகள் அனில் அம்பானிக்கு சொகுசு கார்கள், தனி விமானம், மனைவி டினா அம்பானிக்கு பரிசளித்த ஹெலிகாப்டர் மும்பையில் இரண்டடுக்கு சொகுசு பங்களா ஆகியவை உள்ளதாக தெரிவித்தன. இதற்கு 'அந்த சொத்துக்கள் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமானவை; என்னிடம் ஒரு சொத்தும் இல்லை' என அனில் அம்பானி தெரிவித்திருந்தார். இதையடுத்து உலகளவில் அனில் அம்பானிக்கு சொந்தமாக 75 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட சொத்து விபரங்களை தருமாறு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்தது. இதில் அனில் அம்பானி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வாக்குமூலம் அளித்தார்.

அது குறித்து ரிலையன்ஸ் கம்யூ. செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:தன்னிடம் எந்த தனிப்பட்ட சொத்தும் இல்லை என அம்பானி நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் தான் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக செய்திகள் வெளியிடுகின்றன; அதில் உண்மையில்லை என்றும் தான் மிக எளிமையான வாழ்க்கை வாழ்வதாகவும் அனில் கூறினார். 'மராத்தன்' ஓட்டத்தில் விருப்பம் உள்ளதாகவும் புகை பிடிக்கும் பழக்கமில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆன்மிக வழியில் நடப்பதாக கூறிய அம்பானி தான் சுத்த சைவம் என்றார்.

திரையரங்கில் படம் பார்க்காமல் குடும்பத்துடன் வீட்டில் படம் பார்ப்பதையே விரும்புவதாகவும் அவர் கூறினார். தன்னைப் பற்றிய செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை; தவறாக வழிநடத்துவதாக உள்ளன என அனில் அம்பானி தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார். குறுக்கு விசாரணையில் அனில் அம்பானி அளித்த தகவல்கள் அடிப்படையில் சட்டபூர்வமாக தங்களுக்கு சேர வேண்டிய கடன் தொகையை பெற சீன வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom