Type Here to Get Search Results !

கடந்த 3 ஆண்டுகளில், கேரளாவில் 149 பேர் பயங்கரவாதிகள் 'ஐக்கியம்': மத்திய நுண்ணறிவுப் பிரிவு அதிர்ச்சி தகவல்



கடந்த மூன்று ஆண்டுகளில், கேரளாவில் இருந்து, 149 பேர் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.,சில் இணைந்துள்ளதாக, மத்திய நுண்ணறிவுப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சிலருக்கு பயங்கரவாத தொடர்பு இருப்பதாக, பல ஆண்டுகளாகவே கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, சமீபத்திய தங்கம் கடத்தல் விவகாரத்திலும், பயங்கரவாத தொடர்பு இருக்கும் என்ற கோணத்தில், தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ.,) விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை, காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், எர்ணாகுளம், இடுக்கி, கொல்லம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த, 149 பேர், ஐ.எஸ்.சில் சேர்ந்துள்ளதாக, மத்திய நுண்ணறிவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. 32 பேர் வளைகுடா நாடுகளில், கைது செய்யப்பட்டு, அங்கு ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். இவர்கள், துருக்கி இஸ்தான்புல் நகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளச் சென்றதாக, போலியாக பயண ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தது, விசாரணையில் அம்பலமானது.

இதேபோல், ஐ.எஸ்., முகாம் சென்ற கேரள வாலிபர், அங்குள்ள துயரத்தை விவரித்து அனுப்பிய, 'டெலிகிராம்' தகவல் மத்திய நுண்ணறிவுப் பிரிவுக்குகிடைத்தது. இதன் அடிப்படையில், வெளிநாட்டு ஏஜன்சி உதவியுடன் விசாரித்தபோது, அவர் கொல்லப்பட்டதாக, அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

தற்போது ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிராக வளைகுடா நாடுகளில்,கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பது வெகுவாக குறைந்துள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ''கேரளாவை சேர்ந்த சிலருக்கு ஐ.எஸ்., தொடர்பு குறித்து, மாநில நுண்ணறிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஏற்கனவே விசாரணையை துவங்கி உள்ளது. சிறப்பு படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom