பிரபல செய்தி தொலைக்காட்சி ரிபப்ளிக் டிவி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் பால்கரில் இரு சாதுக்கள் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அர்னாப் கோஸ்வாமி, காங்., தலைவர் சோனியா மவுனம் சாதிப்பது ஏன் என விவாதத்தில் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அர்னாப் கோஸ்வாமி மீது தெலுங்கானா, புதுச்சேரி, சத்தீஸ்கர் , ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி உள்ளி்ட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் டிவி நிகழ்ச்சியை முடித்து விட்டு வீடு திரும்பிய போது சில மர்ம நபர்கள் இவர் மீதும் கார் மீதும் தாக்குதல் நடத்தினர். இவரும், இவரது மனைவியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு சோனியாவை காரணம் என்று அர்னாப் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதற்கிடையில் அவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது . காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரினார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் அர்னாப்பை கைது செய்ய 3 வார காலத்திற்கு தடை விதித்தும், வழக்கு விசாரணையை 8 வாரத்திற்கும் தள்ளி வைத்தனர்.

எனது தலையாய பணி
கோர்ட் தீர்ப்புக்கு பின் அர்னாப் கோஸ்வாமி கூறியிருப்பதாவது: யாருக்கும் தலைவணங்க மாட்டேன். இன்று கிடைத்த தீர்ப்பு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி ஆகும். இந்திய மக்களுக்கும், நீதிபதிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பால்கரில் நடந்த சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே எனது தலையாய பணியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.