Type Here to Get Search Results !

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஏன் கிடைக்கவில்லை…?’ பாஜகவை விமர்சித்த சீமானுக்கு அண்ணாமலை பதிலடி…!

பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை பாஜக ஒதுக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார். இந்நிலையில், சீமானுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காததற்கு நாம் தமிழர் கட்சி தான் காரணம் என அதன் பின்னணி குறித்து விளக்கினார்.

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஏன் கிடைக்கவில்லை...?' பாஜகவை விமர்சித்த சீமானுக்கு அண்ணாமலை பதிலடி...! சீமான்

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தான் நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை இம்முறை வேறு கட்சிக்கு ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நாம் தமிழர் கட்சியின் சின்னம் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவை விமர்சித்தார். மேலும் பாஜகவின் தாமரை சின்னத்தை முடக்க கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும் ஆக்ரோஷமாக தெரிவித்தார். இதுகுறித்து சீமான் கூறுகையில், “பாஜகவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். நிச்சயமாக இந்தத் தேர்தலுக்குப் பிறகு வழக்குப் போடுவேன். இதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும். தாமரை நாட்டின் தேசிய மலர் என்பதை பள்ளிக் கூடங்களில் இருந்து அறிந்து வருகிறோம். தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியின் சின்னமாக தேர்தல் ஆணையம் அதை எப்படி ஒதுக்கியது.

நாம் தமிழர் கட்சிக்கு மயில் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டபோது, அதை தேசிய பறவை என்று கூறி தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. ஆனால் பாஜகவுக்கு எப்படி தாமரை சின்னம் கிடைத்தது. தாமரையை தேசிய மலராக அறிவித்து பாஜக சின்னத்தை ஏற்க வேண்டும். அல்லது தாமரையை பா.ஜ.கவின் சின்னமாக அறிவித்து, மற்றொரு மலரை தேசிய மலராக தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டும்,” என்றார்.

இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சீமான் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் வேண்டும் என்றால் முதலில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் விண்ணப்பிக்கவே இல்லை. சென்னையில் வெள்ளம் வந்ததால் விண்ணப்பிக்க முடியாது என்கிறார்கள். நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால் கரும்பு விவசாயி சின்னம் அவர்களுக்கு கிடைத்திருக்கும்.

நாம் தமிழர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல. இதனால் கட்சி சின்னத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். நாம் தமிழர் அப்படி விண்ணப்பிக்கவில்லை. நாம் தமிழர் கட்சிக்கு விண்ணப்பிக்க வேண்டாமா? நான் அதை நிறுத்தவில்லை. மற்றொரு தரப்பினர் விண்ணப்பித்து கரும்பு விவசாயி சின்னத்தை பெற்றனர். முன்பு ஒதுக்கப்பட்ட சின்னம், ஒதுக்கப்படாததற்கும் அண்ணாமலைக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சரியானதுதான். இத்தனை ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடக்கூடிய நாம் தமிழர் கட்சி, ஏன் இன்னும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறவில்லை? என்று கேள்வி எழுப்பினார். ஆனால் சீமான் என் மீது குற்றம் சாட்டுகிறார்.

நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சீமான் மீது நியாயமாக கோபப்பட வேண்டும். ஒரு கட்சியின் சின்னத்திற்கு விண்ணப்பிப்பது கட்சியின் தலைவரின் பொறுப்பு. எனவே, சீமான் உண்மையை அறிந்து பேச வேண்டும். சீமான் முதலில் பிரதமர் மோடியை திட்டினார். இப்போது என்னை திட்ட ஆரம்பித்துள்ளார். விதிமுறைகளை பின்பற்றாமல் சின்னம் தரச் சொன்னால், தேர்தல் கமிஷன் எப்படி சின்னம் ஒதுக்கும்?” என்று பதிலளித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom