Type Here to Get Search Results !

கெங்கையம்மன் சிரசு திருவிழா.... சிரசு திருவிழா வரலாறு...?

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ளது புகழ்பெற்ற கெங்கை அம்மன் கோவில் .இங்கு ஆண்டுதோறும் வைகாசி 1 ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வெகு விமர்சையாக நடைபெறும் கெங்கையம்மன் சிரசு திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது ஆந்திரா கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் குடியத்திற்கு திருவிழாவை காண வருவார்கள் .

கொரோனா நோயின் 2 வது அலையின் தீவிரம் காரணமாக சென்ற ஆண்டை போலவே எளிமையான முறையில் வெறும் 50 நபர்களை கொண்டு 2 மணிநேரத்தில் கொண்டாடி முடிக்கப்பட்டது . முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கோவில் விழா குழுவினர் சார்பில் ஆகம விதிப்படி சிரசு திருவிழாவை நடத்திக் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவரிடத்தில் அனுமதி கோரி மனு அளித்தனர் .

அனுமதியளித்ததின்பேரில் வைகாசி 1 ம் நாளான இன்று நள்ளிரவில் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் வட்டாட்சியர் வச்லா மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் ஆகியோரின் தலைமையில் 50 பேருடன் நள்ளிரவில் 2 மணி நேரத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா ஆகம விதிப்படி மிக எளிமையாக நடைபெற்றது .

சிரசு திருவிழா வரலாறு

புராண கதைகளின் படி விதர்ப தேசத்தை ஆண்டுவந்த விஜரவத என்ற அரசன் குழந்தை வரம் வேண்டி பிரம்மனை நோக்கிக் கடும் தவமிருந்தார். அரசனின் தவத்தை மெச்சிய பிரம்மன், ரேணுகா தேவியை மகளாகப் பெற்று எடுத்தார் பிரம்மனின் அருளின்படி பிறந்த ரேணுகா தேவி சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டார். பின்னாளில், ரேணுகா தேவிக்கும் ஜமதக்னி முனிவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் உள்ளிட்ட நான்கு மகன்கள் பிறந்தனர்.

வழக்கமாக அதிகாலை நேரத்தில் தாமரைக் குளத்தில் நீராடி குளக்கரை மண்ணில் குடத்தைச் செய்து அதில் தண்ணீரைப் பிடித்து வீட்டுக்கு எடுத்துவருவார் ரேணுகா தேவி. அப்படி ஒரு நாள் நீராடச் சென்றபோது தாமரை குளத்தில் தேவர் குலத்தைச் சேர்ந்த அழகிய கந்தர்வனின் உருவம் தெரிந்தது. கந்தர்வனின் அழகை ரசித்த ரேணுகா தேவி ஒரு நிமிடம் அப்படியே மெய்மறந்து நின்றார். சிறிது நேரத்தில் மண்ணால் ஆன குடத்தை வழக்கம்போல செய்ய முயன்றும் முடியவில்லை. நடந்தது என்னவென்று தெரியாமல் ரேணுகா தேவி திகைத்து நின்றார்.

நீண்ட நேரமாகியும் மனைவி திரும்பி வராத காரணத்தை தனது ஞான திருஷ்டியால் ஜமதக்னி முனிவர் தெரிந்துகொண்டார். கந்தர்வனின் அழகில் மயங்கியதால் மண் குடத்தை செய்ய முடியாமல் நிற்கும் தனது மனைவி கற்பு நெறி தவறிவிட்டார் எனக் கருதினார். தனது மகன்களை அழைத்த ஜமதக்னி முனிவர், மனைவியின் தலையைக் கொய்துவிட்டு வருமாறு கட்டளையிடுகிறார்.

தாயின் பாசத்தால் மூன்று மகன்கள் மறுக்க. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று கோடாரியுடன் புறப்பட்டான் பரசுராமன். பெற்ற மகனே தன்னைக் கொல்ல வருகிறான் என்பதை தெரிந்த தாய் கலக்கத்துடன் தன்னைக் காத்துக்கொள்ள ஓடினார். நீண்ட தூரம் ஓடிய களைப்பால் இடுகாட்டு வெட்டியான் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்தார். பெற்ற தாய் என்று நினைக்காமல் வெட்ட வந்த பரசுராமனைத் தடுத்தார் வெட்டியானின் மனைவி.

தந்தையின் கட்டளையைத் தடுக்க நினைத்த வெட்டியானின் மனைவியின் தலையை வெட்டிய பரசுராமன், பின்னர் தாயின் தலையையும் வெட்டி சாய்த்தான்.

கட்டளையை நிறைவேற்றிய பரசுராமன் தந்தை முன்னால் நின்றான். மகனின் செயலை மெச்சிய ஜமதக்னி முனிவர், என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தந்தையே, உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன். இறந்த தாய் எனக்கு வேண்டும். அவரை உயிர்ப்பித்துக் கொடுங்கள் என்றான். மகனின் ஆசையை நிறைவேற்றப் புனித நீர் கொடுத்து உன் தாயை உயிர்ப்பித்துக் கொள் என்றார். தாயின் உயிர் கிடைக்கும் ஆசையில் ஓடிவந்த பரசுராமன், வெட்டியான் மனைவியின் உடலில் தனது தாயின் தலையை வைத்தும், தனது தாயின் உடலில் வெட்டியானின் மனைவியின் தலையை வைத்து அவசரத்தில் உயிர்ப்பித்துவிட்டான். இந்த புராணக் கதையை விளக்குமாறு, கெங்கையம்மன் சிரசு திருவிழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

பல நூறு ஆண்டுகளாக பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் கெங்கையம்மன் சிரசு திருவிழா பல குடைகளுடன் கம்பீரமாக வீதி உலா வரும் .

சென்ற ஆண்டும் இன்றும் ஒரு குடையுடன் 50 நபர்களுடன் நடைபெற்றது பக்தர்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது மேலும் அம்மனைக் காண ஊர் பொதுமக்கள் கோயில் அருகே அதிக அளவில் கூடியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ஆரவாரமின்றி எளிமையான முறையில் கொண்டாடி முடிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom