Type Here to Get Search Results !

தூய்மையான அரசியல் இந்த மண்ணில் மீண்டும் மலர வேண்டும் என்று நடிகர் விவேக்கின் ஏக்கம் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது... தமிழருவி மணியன்


நடிகர் விவேக் மரணத்துக்கு காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஒருநாள் சாலிகிராமத்திலுள்ள விவேக் வீட்டிற்கு சென்றிருந்தேன். மனம் நெகிழ்ந்து வாசலில் வரவேற்றார். ஒரு மணி நேரம் இருவரும் பேசினோம். அவருடைய பல் துறை அறிவாற்றலும், மனிதநேயமும், சமூக நலனில் அவருக்கிருக்கும் உண்மையான அக்கறையும், தூய்மையான அரசியல் இந்த மண்ணில் மீண்டும் மலர வேண்டும் என்ற அவருடைய ஏக்கமும் எனக்கு வியப்பை ஏற்படுத்தின. சந்திப்பின் முடிவில், அவருடைய நினைவாக வைத்துக்கொள்ளும்படி ஒரு விலையுயர்ந்த பேனாவை எனக்களித்தார்.

ஆனால், ‘அன்பைத்தவிர வேறு எதையும் எவரிடத்தும் நான் பெறுவதில்லை’ என்று மறுத்துவிட்டேன். பொய்த்தனமும் போலியும் மலிந்த அரசியலிலிருந்து முற்றிலும் நான் விலகுவதாக அறிவித்த அறிக்கையை வாசித்த விவேக், “ஒரு பேனாவைக்கூட பெற மறுக்கும் ஒருவர் பொதுவாழ்விலிருந்து விலகுவதென்று எடுத்த முடிவைத் திரும்பப் பெறவேண்டும்” என்று ட்வீட் செய்து தொலைபேசியிலும் என்னை அழைத்து ‘விலக வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். என்னுடைய ‘வழிப்போக்கனின் வாழ்க்கை அனுபவங்கள்’ நூலை கடந்த ஆண்டு கொரோனா சூழலில் வாசித்துக்கொண்டிருப்பதாக பதிவிட்டதோடு தொலைபேசியிலும் அழைத்துப் பேசிய விவேக், ‘கொரோனாவின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவுடன் நாம் அவசியம் சந்திக்கவேண்டும். நிறைய பேசவேண்டும்’ என்றார்.

ஆனால், கருணையற்றக் காலம் நொடிப்பொழுதில் அந்த அற்புதமான கலைஞனை, நெறி சார்ந்து வாழ்ந்த நல்லவனை, இயற்கையை நேசித்த இனிய பண்புகள் கொண்டவனை, மனித நேயம் மிக்கவனை, சிரிக்கவைத்து சிந்தனையை தூண்டியவனை, நம்மிடமிருந்து பறித்துக்கொண்டது. நகைச்சுவை நடிகர்களில் துருவ நட்சத்திரமாக துலங்கியவர் விவேக்” என்று உருக்கமாக தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom