Type Here to Get Search Results !

பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேட்புமனுதாக்கல்

 

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேட்புமனுதாக்கல் செய்தார்.

முன்னதாக பா.ஜ.க அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வந்தார். வேட்புமனுதாக்கலுக்கு பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``கன்னியாகுமரி மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலுவையில் இருக்கும் நான்குவழிச்சாலை, இரட்டை ரயில் பாதை திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படும். ஏற்கனவே அறிவித்த இ.எஸ்.ஐ மருத்துவமனை, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றப்படும், ரப்பர் பூங்கா திட்டங்கள் கொண்டுவரப்படும்.

தேர்தல் நெருங்கிவரும்போது எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் சாதனைகளை சொல்ல கடுகளவு கூட வாய்ப்பு இல்லை. இந்த நிலையில் ஜாதிய, மத ரீதியான உணர்வுகளை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கிறார்கள்.

வேட்புமனுதாக்கல் செய்ய ஊர்வலமாக வந்த பொன்.ராதாகிருஷ்ணன்

இரண்டு ஆண்டுகளாக எந்த திட்டத்துக்கும் நான் முயற்சி எடுக்கவில்லை. மாவட்ட மக்கள் புதிய பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதால் நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்போது நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்கும்போது ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுங்கள் நான் துணை நிற்கிறேன் என்று கூறினேன். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2019-ல் ஏமாந்துவிட்டோம் என குமரி மாவட்டத்து மக்கள் சொல்கிறார்கள்.

நான் கொண்டுவந்த மார்த்தாண்டம் மேம்பாலம் ஆடுகிறது என்றார்கள். காங்கிரஸ், தி.மு.க-வினர் கண்ணுக்கு மட்டும் பாலம் ஆடுவது தெரிந்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் பாலம் ஆடுவது நின்றுவிட்டது. இதன் பின்னணியில் திட்டமிட்ட சதி இருக்கிறது. மக்கள் விரும்பும் திட்டங்கள் வரும். துறைமுகம் குறித்து தளவாய் சுந்தரம் அவருடைய கருத்தை சொல்லியிருக்கிறார். நான் ஐந்து வருடம் முயற்சி செய்தபோது துறைமுகம் குறித்து இதுபோன்ற விஷயங்கள் வெளிவரவில்லை. தேர்தல் அறிவித்தபிறகு எப்படி வெளியே வருகிறது.

செய்தியாளர் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். தொழில் தொடங்க குமரி இளைஞர்கள் முன்வர வேண்டும். திருப்பூர், கோவை, ஈரோடு முன்னேறும்போது ஏன் கன்னியாகுமரி முன்னேறமுடியாது. நம் இளைஞர்கள் ஏன் முன்னேற முடியாது. அதை நடத்திக்காட்ட முடியும். துறைமுக விஷயத்தின் பின்னால் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சதி நடக்கிறது. கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் எல்லா முக்கிய தலைவர்களும் பிரசாரத்துக்கு வரவேண்டும் என விரும்புகிறேன்.

1967-ல் காமராஜர் காலத்தில் மூன்றுபடி அரிசி வழங்குவேன் என தி.மு.க வாக்குறுதி கொடுத்தது. கடல்பாசியில் அல்வா கொடுப்பதாக நமக்கு 1967-ல் அல்வா கொடுத்தார்கள். 4 முறை முதல்வராக இருந்த கலைஞர் ஐந்தாவது முறையாக வெற்றிபெற்றால் அனைத்து குடும்பத்துக்கும் 2 ஏக்கர் நிலம் கொடுப்பேன் என்றார். ஆட்சிக்கு வந்த பிறகு 2 ஏக்கர் நிலம் எப்போ தருவீங்க என கேட்டதற்கு, தமிழ்நாட்டில் அவ்வளவு நிலம் இல்லை என்பது இப்போதுதான் தெரிகிறது எனக்கூறினார். இலவச திட்டங்கள் நிறைவேற்றப்படுவது, அதை சொல்லக்கூடிய நபரைப் பொறுத்தது. சொல்பவருக்கு செய்யககூடிய தகுதி இருக்கிறாதா என்பதையும், அவரது மனதையும் பொறுத்தது" என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom