Type Here to Get Search Results !

பா.ஜ.க-வின் வெற்றி எப்படி இருக்கிறது.... அதிர்ச்சி தகவல்

 

பா.ஜ.க-வின் முன்னாள் தேசிய செயலாளரான ஹெச்.ராஜா, காரைக்குடி தொகுதியில் களமிறங்குகிறார். இவர் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என ஏற்கெனவே பல தேர்தல்களில் போட்டியிட்டவர். 2001-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றது. அப்போது, காரைக்குடியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதைத்தவிர அவர் போட்டியிட்ட மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அவர் தோல்வியையே தழுவியிருக்கிறார்.

ஹெ.ச்.ராஜா

1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.

2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். 2014-ம் ஆண்டு சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். 2019-ம் ஆண்டு சிவகங்கை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். காரைக்குடி தொகுதியில் பா.ஜ.க-வின் சொந்த பலம் என்பது குறைவுதான். அ.தி.மு.க கூட்டணி என்பது இவரது பலம். ஆனாலும், சட்டமன்ற வேட்பாளர் என்ற எண்ணத்துடன் கீழே இறங்கிவந்து வேலை செய்வதற்கு பதிலாக, இன்னமும் பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் என்ற ரீதியிலேயே அவர் அணுகுவதாக கூட்டணிக் கட்சியினர் புலம்புகிறார்கள்.

1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இயக்குநர் இராம.நாராயணன் வெற்றிபெற்றார். அதன் பிறகு, த.மா.கா. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களே இங்கு வெற்றிபெற்றுள்ளனர். இந்த முறை, தி.மு.க தலைமையிலான கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார் எஸ்.மாங்குடி.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளராக சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட்டு 1,22,535 வாக்குகளைப் பெற்ற தேர்போகி பாண்டி. தற்போது காரைக்குடி தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராகக் களமிறங்குகிறார். இவர், அ.தி.மு.க வாக்குகளை கணிசமான அளவுக்குப் பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் எந்தளவுக்கு வாக்குகளைப் பிரிப்பார் என்பதைப் பொறுத்தே ஹெச்.ராஜாவின் வெற்றி இருக்கும் என்கிறார்கள் அந்தத் தொகுதியின் அரசியல் பார்வையாளர்கள்.

பா.ஜ.க-வின் தேசிய மகளிரணி செயலாளரும் வழக்கறிஞருமான வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கியிருக்கிறார். தி.மு.க கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இங்கு களமிறங்குவது அந்தத் தொகுதியின் களச்சூழலை மாற்றியிருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராகக் களமிறங்கிய அந்தக் கட்சியின் துணைத் தலைவரான டாக்டர் மகேந்திரன் ஒன்றரை லட்சம் வாக்குகளைப் பெற்றார். நகர்ப்புறத்தில் அமைந்துள்ள தொகுதி, படித்தவர்கள் அதிகமுள்ள தொகுதி என்பதால், தமக்கு இங்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்பது கமல்ஹாசன் கணிப்பு. எனவே, இந்தத் தொகுதியை அவர் தேர்வுசெய்துள்ளார்.

வானதி சீனிவாசன்

காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு தி.மு.க வாக்குகளும் சிறுபான்மை வாக்குகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்தத் தொகுதியில் இஸ்லாமியர் ஒருவரை நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது. அ.ம.மு.க கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இஸ்லாமிய வாக்குகளைப் பலரும் பிரிக்கிறார்கள். அது யாருக்கு சாதகமாக அமையும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் இந்தத் தொகுதிக்கு நன்கு அறிமுகம் ஆனவர். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 33 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை அவர் பெற்றார். அதைத் தொடர்ந்து, கடந்த சில வருடங்களாக இந்தத் தொகுதியில் தீவிரமாகக் களப்பணியையும் ஆற்றியிருக்கிறார். எனவே, நிச்சயம் வெற்றிபெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர் களமிறங்கியிருக்கிறார்.

கோவை தெற்கு தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான அ.தி.மு.க-வின் அம்மன் அர்ஜுன் தரப்பு, பா.ஜ.க-வுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்ததால், அவர்களை வானதி சீனிவாசன் தரப்பு சமாதானம் செய்திருக்கிறது. பவர்ஃபுல் அமைச்சரான வேலுமணியின் முழு ஆதரவு பா.ஜ.க-வுக்கு இருப்பதால், வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக அ.தி.மு.க ஆர்மி களமிறங்கியிருக்கிறது. பலமுனைப் போட்டி இருந்தாலும் வானதி சீனிவாசனுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கமல்ஹாசன்

ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடவே பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் விரும்பினார். தனது சொந்த மாவட்டத்தில் ராசிபுரம் இருப்பதால் அந்தத் தொகுதியைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் ஆரம்பத்திலிருந்து அவர் ஆர்வம் காட்டினார். ஆகவேதான், நாமக்கல் மாவட்டத்தில் எழுச்சி மாநாட்டையெல்லாம் பா.ஜ.க நடத்தியது. பா.ஜ.க -வின் உத்தேச தொகுதிப் பட்டியல் வெளியானபோது, அதில் ராசிபுரம் இடம்பெற்றிருந்தது. நமது தொகுதியில் மாநிலத் தலைவர் போட்டியிடப் போகிறார் என்ற ஆர்வத்தில், தொகுதி உறுதியாவதற்கு முன்பே உள்ளூர் பா.ஜ.க-வினர் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.

ஆனால், ஒரு சிக்கல் இருந்தது. ராசிபுரம் என்பது சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா வெற்றிபெற்ற தொகுதி. எல்.முருகன் போட்டியிடப் போகிறார் என்ற தகவல் வெளியானதையடுத்து, அமைச்சர் சரோஜாவுக்கு ராசிபுரம் தொகுதி கிடையாதா என்ற கேள்வி அ.தி.மு.க வட்டாரத்துக்குள் எழுந்தது. கடைசி நேரத்தில், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ராசிபுரத்தை சரோஜா வாங்கிவிட்டார். அ.தி.மு.க-வின் தொகுதிப் பட்டியல் வெளியானபோது, அதைக் கண்டு பா.ஜ.க-வினர் அதிர்ச்சியடைந்தனர். தான் விரும்பிய ராசிபுரம் கிடைக்காத நிலையில், திருப்பூர் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார் எல்.முருகன். மத்தியில் ஆளுகிற கட்சியின் மாநிலத் தலைவர் என்ற அந்தஸ்து எல்.முருகனின் பலம்.

முருகன்

இங்கு பா.ஜ.க-வும் தி.மு.க-வும் நேரடியாக மோதுகின்றன. 2011-ல் அ.தி.மு.க-வும், 2016-ல் காங்கிரஸும் வெற்றிபெற்றன. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு தி.மு.க களமிறங்குகிறது. தி.மு.க-வின் வேட்பாளராக கயல்விழி நிறுத்தப்பட்டுள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் கட்சி போட்டியிடுவதால், தி.மு.க-வினர் தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறார்கள். தி.மு.க-வுக்கு ஈடுகொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு எல்.முருகன் ஆளாகியிருக்கிறார்.

அ.தி.மு.க கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால், அந்தத் தொகுதியை எதிர்பார்த்திருந்த குஷ்புவுக்கு பா.ஜ.க-வில் சீட் இல்லை என்று செய்திகள் வெளியாகின. ஆனால், குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட பா.ஜ.க வாய்ப்பு வழங்கியிருக்கிறது. இந்தத் தொகுதியில் 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க-வின் கு.க.செல்வம், பா.ஜ.க-வுக்கு தாவினார். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட கு.க.செல்வத்துக்கு பா.ஜ.க-வில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு குஷ்பு களமிறங்குகிறார்.

குஷ்பு

ஒரு காலத்தில் தி.மு.க-வின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக ஆயிரம் விளக்கு தொகுதி பார்க்கப்பட்டது. தி.மு.க இளைஞரணி செயலாளராக இருந்தபோது, 1989, 1996, 2001, 2006 என நான்கு முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிபெற்றார் மு.க.ஸ்டாலின். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க-வின் வளர்மதி வெற்றிபெற்றார்.

இந்த முறை, தி.மு.க வேட்பாளராக டாக்டர் எழிலன் களமிறங்கியிருக்கிறார். பொருளாதார நிபுணரும் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் நாகநாதனின் மகன்தான் டாக்டர் எழிலன். மருத்துவராக இருக்கும் இவர் சமூகநீதி, இடஒதுக்கீடு, சுற்றுச்சூழல் போன்றவற்றில் ஆர்வத்துடன் செயல்பட்டுவருபவர். தீவிரமான கருத்தாளராகவும் செயற்பாட்டாளராகவும் பார்க்கப்படுபவர். திரையுலக பிரபலம் என்பது குஷ்புவுக்கு சாதகமான அம்சம். புகழ் வெளிச்சத்துக்கும் களசெயல்பாட்டுக்கும் இடையே கடும் போட்டியைப் பார்க்க முடிகிறது.

ஐ.பி.எஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று பா.ஜ.க-வில் சேர்ந்த கே.அண்ணாமலை, அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே அரவக்குறிச்சி தொகுதியைக் குறிவைத்து பல வேலைகளை அவர் செய்திருக்கிறார். குறிப்பாக, 'வீ த லீடர்' என்ற அமைப்பை இங்குதான் அவர் ஆரம்பித்தார். தொகுதி மக்களிடம் அறிமுகம் ஆக வேண்டும் என்பதற்காக கோலப்போட்டி, மராத்தான் ஓட்டம் போன்றவற்றை நடத்தினார். பா.ஜ.க-வில் சேர்ந்து, அங்கு அவருக்கு துணைத் தலைவர் பதவி தரப்பட்ட பிறகு அந்தப் பகுதியில் நன்கு அறிமுகம் ஆனார். சமூகவலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துகள் பரப்பப்பட்டதும் அவருக்கு விளம்பரமாக மாறியது. எப்படியும் வெற்றிபெற்றுவிடுவது என்று தீவிர பிரசாரத்தில் அண்ணாமலை இறங்கியிருக்கிறார்.

அண்ணாமலை

தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி அரவக்குறிச்சி தொகுதியில் சீட் எதிர்பார்த்த நிலையில், இளங்கோ என்பவருக்கு தி.மு.க சீட் கொடுத்துள்ளது. இதனால், தி.மு.க-வில் சிலர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இளங்கோவுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முழு ஆதரவு இருக்கிறது. அரவக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட பள்ளப்பட்டி என்ற ஊரில் சுமார் 29 ஆயிரம் வாக்குகள் இருப்பதாகவும், அதில் 20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வாக்குகள் வரை தி.மு.க-வுக்கு விழும் என்றும் இந்தத் தொகுதியின் நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். இங்கு கணிசமாக இருக்கும் இஸ்லாமிய வாக்குகள் மற்றும் பட்டியலின வாக்குகள் தி.மு.க-வுக்கு ஆதரவாக விழும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

25 ஆயிரம் பேருக்கு தலா மூன்று சென்ட் நிலம் தருவேன் என்று தான் அளித்த வாக்குறுதியை செந்தில்பாலாஜி நிறைவேற்றவில்லை. அது, தி.மு.க-வுக்கு ஒரு பலவீனம் என்று கருதப்படுகிறது. மற்றபடி, அண்ணாமலையின் வெற்றிவாய்ப்புக்கு தி.மு.க வேட்பாளர் இளங்கோ பெரும் சவாலாக இருப்பார் என்கிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom