Type Here to Get Search Results !

பெரும்பான்மையை நிரூபிக்கும்படி மம்தா பானர்ஜியிடம் ஆளுநர் கேட்க வாய்ப்பு உள்ளது : பாஜக எம்.பி. சவுமித்ர கான்


சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதல்வர் மம்தா பானர்ஜியிடம் மேற்கு வங்க ஆளுநர் கேட்க வாய்ப்புள்ளதாக பாஜக எம்.பி. சவுமித்ர கான் தெரிவித்துள்ளார்.

கடந்த பல மாதங்களாக, மேற்கு வங்க ஆளுநர் தங்கருக்கும் மம்தாவுக்கும் உரசல் போக்கு இருந்து வருகிறது. தனது மாநிலத்தில் ஒரு இணை நிர்வாகத்தை நடத்துவதாக ஆளுநர் மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் , திரிணமூல் காங்கிரஸ் மொத்தம் 211 இடங்களை வென்றது. அத்தேர்தலில் பாஜக மூன்று எம்எல்ஏக்களை மட்டுமே பெற முடிந்தது. எனினும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 18 நாடாளுமன்றத் தொகுதிகளை மேற்கு வங்கத்தில் வென்றது. அதன் பிறகு அங்கு கட்சியைப் பலப்படுத்த பாஜக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

2021ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் (டி.எம்.சி) கட்சியைச் சேர்ந்த பல முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களும் பாஜகவில் இணைந்தனர்.

அமைச்சர் ராஜினாமா

கடந்த வாரம் மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். கட்சியில் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், சுவேந்து அதிகாரி திரிணமூல் கட்சியில் இருந்தும் விலக உள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் சுவேந்துவை பாஜகவில் வந்து இணையும்படியும் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் சுவேந்துவின் ஆதரவு எம்எல்ஏக்களின் நிலைப்பாடும் அவரின் நிலைப்பாட்டைப் பொறுத்து அமையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. சவுமித்ர கான், ''மம்தாவின் கட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். அவரது கட்சியில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களும் விலகி வருகின்றனர். அதில் முக்கியமானது அமைச்சர் சுவேந்துவின் ராஜினாமா. கூடிய விரைவில் மாநிலச் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் ஆளுநர் ஜகதீப் தங்கர் கேட்க வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தார்.

சவுமித்ர கானும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom