Type Here to Get Search Results !

பிரியாவிடை பண்டைய போர்க்கப்பல்: ஐ.என்.எஸ், விராட் உடைக்கப்படுகிறது




உலகின் பழமையான விமானம் தாங்கி போர்க்கப்பலான, ஐ.என்.எஸ்., விராட், குஜராத்தின் அலாங்க் பகுதியில் உடைக்கப்படவுள்ளது.

ஐ.என்.எஸ்., விராட் விமானம் தாங்கி போர்க்கப்பல், இந்திய கடற்படையில், கம்பீரமாக வலம் வந்தது. 2.78 கோடி கிலோ எடையிலான இந்த கப்பல், 226.5 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த போர்க்கப்பல், எச்.எம்.எஸ்., ஹெர்மஸ் என்ற பெயருடன், பிரிட்டன் கடற்படையில், 1959 முதல், 1984 வரை சேவை புரிந்தது. 1982ல், அர்ஜென்டினாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று, இந்த கப்பல் பாராட்டுகளைப் பெற்றது.

இதையடுத்து, 1987ல், 475 கோடி ரூபாய்க்கு, இந்த போர்க்கப்பலை வாங்கிய இந்திய அரசு, அதே ஆண்டு, தன் கடற்படையில் இணைத்துக்கொண்டது. அதற்கு, ஐ.என்.எஸ்., விராட் என பெயரும் சூட்டப்பட்டது.இதையடுத்து, 30 ஆண்டுகளாக சேவையில் இருந்த இந்த கப்பல், 2017ல், கடற்படையில் இருந்து நீக்கப்பட்டது. பின், இந்தக் கப்பலை அருங்காட்சியகமாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சி தோல்வி அடைந்ததால், கடந்த ஆண்டு, ஐ.என்.எஸ்., விராட்டை உடைக்க, மத்திய அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, கப்பலை உடைப்பதற்கு, 'மெட்டல் ஸ்கிராப் டிரேட் கார்ப்பரேஷன் லிமிடெட்' ஏலம் விட்டது. இந்த ஏலத்தை, 38.54 கோடி ரூபாய்க்கு, ஸ்ரீ ராம் குழுமம் எடுத்தது.இந்நிலையில், குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள அலாங் கப்பல் உடைக்கும் தளத்தில், அந்த கப்பலை உடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, ஸ்ரீ ராம் குழுமம் தலைவர் முகேஷ் படேல் கூறியதாவது:கப்பல் இயக்குனரகத்திடம் இருந்து ஒப்புதல் கிடைத்ததும், மும்பையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ்., விராட், அலாங்கில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்திற்கு, எடுத்துச்செல்லப்படும். இதற்கு, மூன்று நாட்கள் ஆகும்.இதையடுத்து, கப்பலை உடைக்கும் பணிகள் துவங்கப்படும். இந்த ஒட்டுமொத்த கப்பலும் உடைக்கப்படுவதற்கு, 9 முதல், 12 மாதங்கள் வரை ஆகும். பின், அதன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இந்தியாவில் உடைக்கப்படும் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பல், ஐ.என்.எஸ்., விராட் ஆகும். கடந்த, 2014ல், ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பல், மும்பையில் உடைக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom