Type Here to Get Search Results !

பி.பி.இ., தயாரிப்பில் உலகை ஆளலாம்; 'கொரோனா'வை அடக்கலாம்!

latest tamil news

 'கொரோனா'வை கட்டுப்படுத்தும் வழியில், இந்தியா முன்னேறி வருவதோடு, சர்வதேச அளவில், பி.பி.இ., ஆடை தயாரிப்பிலும், முன்னோடியாக திகழும் சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.

'கொரோனா' சிகிச்சை யின் போது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்களுக்குப் பி.பி.இ., எனப்படும் பாதுகாப்புக்கவச உடைகள் முக்கிய தேவையாக உள்ளன. 'கொரோனா' அச்சுறுத்தல், பி.பி.இ., எனப்படும் பாதுகாப்புக்கவச உடைகளை, தினமும், 10 ஆயிரம் எண்ணிக்கையில் தயாரிக்கும் திறன் கொண்டுள்ளதாக, நம் நாட்டை மாற்றியுள்ளது. விரைவில், மூன்று லட்சம் பி.பி.இ.,க்களைத் தயாரிக்கும் திறன் கொண்டதாக மாறப்போகிறது. இதனால், ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கான, புதிய வளர்ச்சிப்பாதை திறந்து விடப்பட்டுள்ளது.



தரமற்ற சீன 'பி.பி.இ.,'


பி.பி.இ.,க்கு சீனாவை மட்டுமே நம்பியிருப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை, தற்போது, உலக நாடுகள் உணரத் துவங்கியிருக்கின்றன. ஜவுளித்துறையில் கோலோச்சி வரும் இந்தியா கூட, பி.பி.இ.,க்கு, சீனாவைத் தான் பெரிதும் நம்பியிருக்கிறது. கடந்த ஏப்., 5ம் தேதி, சீனாவில் இருந்து, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட, 1.70 லட்சம்பி.பி.இ.,க்களில், 50 ஆயிரம் பி.பி.இ.,க்கள் தரத்தில் குறைபாடுள்ளதாக இருப்பது, ஆய்வக சோதனையில் தெரியவந்துள்ளது.



'சிட்ரா'வில் ஆய்வுக்கூடம்


மத்திய சுகாதார அமைச்சகம், நாட்டில் தயாராகும், பி.பி.இ.,க்களைத் தரப்பரிசோதனை மேற்கொள்ள, கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் (சிட்ரா), சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனத்தொழிற்சாலை, ம.பி., மாநிலம், குவாலியரில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(டி.ஆர்.டி.இ.,), உ.பி., மாநிலம், கான்பூரில் உள்ள சிறு ஆயுத உற்பத்தி ஆலை ஆகியவற்றில் ஆய்வுக்கூடங்கள் உள்ளன.பி.பி.இ., தயாரிக்க, யு.சி.சி., எனப்படும், பிரத்யேக சான்றளிப்புக் குறியீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டில், துணி, ஆடைவகை, பரிசோதிக்கப்பட்ட தேதி, தர மதிப்பீடு உள்ளிட்ட விவரங்கள், இடம்பெற்றிருக்கும். குறிப்பாக, உள்நாட்டில் பி.பி.இ.,க்கள், தரத்தில் குறைபாடுகள் இல்லாத வகையில், உருவாக்கப்பட வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது.


திருப்பூருக்கு வாய்ப்பு


ஊரடங்கு காரணமாக, நாடு முழுதும், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சர்வதேச ஜவுளி ஆர்டர்களும் ரத்தானதால், இவற்றுக்குச் சிக்கல் ஏற்பட்டது. 'கொரோனா' அச்சுறுத்தல், ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தினாலும், புதிய பாதையையும் தற்போது காட்டியிருக்கிறது.பின்னலாடைத்துறையில் அசத்திவரும் திருப்பூரில், பல்வேறு நிறுவனங்கள் பி.பி.இ., தயாரிப்பில் களமிறங்கியிருக்கின்றன. மூலப்பொருட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட சிரமங்களைச் சந்தித்தாலும், பி.பி.இ.,க்களை நேர்த்தியுடன் தயாரிப்பதில், இவை முனைப்பு காட்டுகின்றன. உலகம் முழுவதும், பி.பி.இ.,க்குத் தேவையுள்ள நிலையில், தரத்துடன் உற்பத்தியைத் தொடரும் திருப்பூருக்கு, பெரிய சந்தை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.



இந்தியா சாதிக்கும்!


நம் நாடு, தற்போது, தினமும், 10 ஆயிரம் பி.பி.இ.,க்கள் தயாரிக்கும் திறனைப் பெற்றிருக்கிறது. எதிர்காலத்தில், 3 லட்சம் பி.பி.இ.,க்களைத் தயாரிக்கும் திறனைப் பெற முடியும். தமிழகத்தில், திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள 200 நிறுவனங்கள், தற்போது பி.பி.இ., தயாரிப்பில் களமிறங்கியுள்ளன. கூடுதலாக இன்னும் பல நிறுவனங்கள், இதற்கான வாய்ப்பைப் பெற முடியும். இதற்கு, மத்திய, மாநில அரசுகளின் ஊக்குவிப்பு அவசியம்.எதற்கெடுத்தாலும் சீனாவை தான் உலக நாடுகளே நம்பியிருக்க வேண்டிய நிலையில், அதை தகர்த்து, இந்தியா சாதிப்பதற்கு, பி.பி.இ., தயாரிப்பு, ஒரு அச்சாரமாக விளங்கும் என்பதில், இனி சந்தேகம் இல்லை.



சிறு நிறுவனங்கள் சாதிக்கலாம்!


டில்லி ஐ.ஐ.டி., எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் அரியானாவில் உள்ள உலக டிசைன் பல்கலையுடன் இணைந்து, சென்னையில் உள்ள சில ஜவுளி நிறுவனங்கள், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில், பி.பி.இ.,க்களைச் சுகாதாரப்பணியாளர்களுக்காக தயாரித்து வருகின்றன. சிறு, குறு நிறுவனங்கள் முயன்றால், பி.பி.இ.,க்களை எளிதாகத் தயாரிக்க முடியும். இந்த உடைகள், மேற்பரப்பைத் தொடாமலேயே கழற்றக்கூடிய வகையில் உருவாக்கப்படுகின்றன. அதாவது, மேற்பரப்பில் தொற்று அபாயங்கள் இருந்தாலும், அதில் இருந்து உடையை அணிபவர் தப்பிக்க முடியும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom