
உலகம் முழுவதும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும், 21ம் தேதி, ஆறாவது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் யோகா தினத்தில் மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் பற்றிய தொகுப்பை, ஐ.நா.,வுக்கான இந்திய துாதரகம் வழங்கியுள்ளது. 'உடல் நலத்துக்கான யோகா; வீட்டிலேயே யோகா' என்ற தலைப்பில், இந்த பயிற்சி திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இது பற்றி, ஐ.நா.,வுக்கான இந்திய துாதரக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதில், உடல் நலத்தை மேம்படுத்தும், அனைத்து வயதினருக்கும் ஏற்ற யோகா பயிற்சிகள் இடம் பெற்றுள்ளன. இதை அனைவரும், வீட்டிலேயே செய்ய முடியும். எளிமையாக யோகாசனங்கள், மூச்சு பயிற்சி, தியானம் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.
வைரஸ் பரவல் காரணமாக, உலகளவில், மக்கள் பெரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, யோகா பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். இதில், யோகாவின் பயன்கள் பற்றி, சத்குரு, ஜக்கி வாசுதேவ் உட்பட யோகா குருக்கள் பலர் பேசும், 'வீடியோ' பதிவுகளும் இடம் பெற்றுள்ளன. இந்த யோகா பயிற்சி, ஐ.நா.,வின் இணையதளத்தில், 19ம் தேதி ஒளிபரப்பாகும். இவ்வாறு, அவர் கூறினார்.