Type Here to Get Search Results !

நரேந்திர மோடி தமிழ் பக்கத்தில் தமிழில் பேசுவதை, மக்கள் அனைவரும் கேட்கவேண்டும்...

 இன்றைய தினம், சேலம் மாநகரில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், பெரும் திரளென, ஆர்ப்பரிப்புடன் கலந்து கொண்ட பொதுமக்கள் மத்தியில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் எழுச்சி உரையாற்றினார். கோட்டை மாரியம்மனை வணங்கித் தொடங்கிய தனது உரையில், தமிழகத்தில், தமக்கும், பாஜகவுக்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும், நாடே இன்று கவனித்துக் கொண்டிருக்கிறது என்று பெருமையுடன் குறிப்பிட்ட நமது பிரதமர் அவர்கள், இதனால் திமுக தனது தூக்கத்தைத் தொலைத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

பாஜகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று கூறிய நமது பிரதமர் அவர்கள், தேசிய அளவில் 400 தொகுதிகளுக்கும் மேல் நிச்சயம் வெற்றி பெறப் போகிறோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு, வளர்ச்சியடைந்த தமிழகத்துக்கு, நவீன உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாக, பாரதம் தன்னிறைவு பெற, விவசாயிகள் பயனடைய, மீனவர்கள் பாதுகாப்புக்கு, என, இம்முறை 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்று உறுதி தெரிவித்தார்.

தமிழகத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக உருவாகியிருக்கிறது என்று கூறிய நமது பிரதமர், பாமக நிறுவனர் ஐயா ராமதாஸ் அவர்கள் அனுபவமும், பாமக தலைவர் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆற்றலும், தமிழகத்தை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல உதவும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்த நமது பிரதமர், பாட்டாளி மக்கள் கட்சியை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

தாம் பல முறை சேலம் வந்திருப்பதாகக் குறிப்பிட்ட நமது பிரதமர் அவர்கள், இம்முறை சேலத்திற்கு வரும்போது, தம்முடைய கைலாஷ், மானசரோவர் பயணத்தின்போது உடன் வந்த, சேலத்தைச் சேர்ந்த அமரர் திரு ரத்தினவேல் அவர்களை நினைவு கூர்ந்தார். சேலம் மாநகரின் சிறப்புக்களைக் குறித்து அமரர் திரு. ரத்தினவேல் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பின், சேலம் மாநகரின் மீது பெரும் ஈர்ப்பு உருவானதாகத் தெரிவித்தார்.

சேலம் மாநகரத்தைச் சேர்ந்த,

தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அமரர் K.N.லட்சுமணன் அவர்களை நினைவுகூர்ந்த நமது பிரதமர் அவர்கள், நெருக்கடி நிலையின்போது கூட, தடைகளை மீறிப் போராட்டம் நடத்தியவர், தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்காக, ஆரம்ப காலத்தில் பாடுபட்டவர், என்று புகழாரம் சூட்டினார். மேலும், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷ் அவர்களை நினைவுகூர்ந்தபோது, கண்கலங்கிய நமது பிரதமர் அவர்கள், கட்சிக்காக தனது உயிரைத் தியாகம் செய்த ஆடிட்டர் ரமேஷ் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்.

திமுக காங்கிரஸ் அமைத்துள்ள இந்தி கூட்டணியின் நோக்கம், இந்து மதத்தை அழிப்பது மட்டுமே என்பது, அவர்களின் முதல் கூட்டத்தில் இருந்தே தெளிவாகிவிட்டது என்று கூறிய நமது பிரதமர் திரு மோடி அவர்கள், இந்து மதத்தில் சக்தி வழிபாடு எத்தனை முக்கியமானது என்பதைப் பற்றிப் பேசிய நமது பிரதமர், கோட்டை மாரியம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மன், சமயபுரம் மாரியம்மன் என, நமது வழிபாடே பெண்களை முன்னிறுத்திய சக்தி வழிபாடாகத்தான் இருக்கிறது. ஆனால், திமுக காங்கிரஸ் இந்தி கூட்டணியின் நோக்கம் சக்தி வழிபாட்டை அழிக்க முயற்சிப்பதே என்றும் குற்றம் சாட்டினார். வேண்டுமென்றே, இந்து மதத்தை அவமதிப்பதும், திட்டமிட்டு, இந்து மதத்துக்கு மட்டுமே எதிராகச் செயல்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். மேலும், இந்திக் கூட்டணிக் கட்சிகள், தமிழர்களின் பாரம்பரியமான, இந்து மத அடையாளமான செங்கோலை, புதிய நாடாளுமன்ற மையக்கட்டிடத்தில் வைப்பதை தடுக்க முயற்சித்தார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

கடவுளை பெண்வடிவில் சக்தியாக, பாரத அன்னையாக வழிபட்ட மகாகவி பாரதியார் வழியில், தாமும் ஒரு சக்தி உபாசகர் என்று குறிப்பிட்ட நமது பிரதமர் திரு மோடி அவர்கள், சக்தி வழிபாட்டை அழிக்க நினைத்தவர்கள் அனைவரும் அழிந்து போனதுதான் வரலாறு என்று குறிப்பிட்டார். மேலும், இந்தி கூட்டணியின் அழிவு, ஏப்ரல் 19 அன்று முதல் கட்டத் தேர்தல் நடக்கவிருக்கும் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கப்போகிறது என்று உறுதியுடன் தெரிவித்தார்.

சக்தியின் வடிவமான நமது சகோதரிகளுக்கு, புகையில்லா சமையல் செய்ய, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, இலவச மருத்துவ சிகிச்சைக்காக ஆயுஷ்மான் திட்டம், தமிழகத்தில், மூன்று கோடியே 65 லட்சம் பேருக்கு இலவச ரேஷன் பொருள்கள், வீடுதோறும் சுத்தமான குடி நீர் தரும் ஜல்ஜீவன் திட்டம், நாட்டிலேயே முத்ரா கடனுதவி அதிகம் வழங்கப்பட்ட தமிழகத்தில், பெண்கள்தான் அதிகம் பயனடைந்துள்ளனர் என்று குறிப்பிட்ட நமது பிரதமர், பெண்களுக்கான இந்த நலத்திட்டங்களால் பலனடைந்த நாடு முழுவதும் உள்ள பெண்கள்தான் தமக்கும், பாஜகவுக்கும் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் பெருமையுடன் தெரிவித்தார்.

திமுக காங்கிரஸ் இந்தி கூட்டணி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கும் கூட்டணி. பெண்களை இழிவுபடுத்தும் கட்சிகள். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை இவர்கள் நடத்தியவிதமே சாட்சி என்று குறிப்பிட்ட நமது பிரதமர் அவர்கள், திமுகவும் காங்கிரஸும் ஊழலும், குடும்ப ஆட்சியும் மட்டுமே செய்யும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றும், காங்கிரஸ் கட்சி ஆட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு, நாடு தொலைத் தொடர்புத் துறையில், 5G தொழில் நுட்பத்தை நோக்கி முன்னேறுகிறது. ஆனால், திமுக, தனது ஐந்தாவது தலைமுறை வாரிசு அரசியலைக் கொண்டு வர முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். திமுக காங்கிரஸ் ஊழல்களைக் கூற ஒரு நாள் போதாது என்று கூறிய பிரதமர், மத்திய அரசு தமிழகத்தின் முன்னேற்றத்துக்காகச் செலவிடும் நிதியை எப்படிக் கொள்ளையடிக்கலாம் என்பதே திமுகவின் நோக்கமாக இருக்கிறது என்றும் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தின் ஒப்பற்ற பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜ் அவர்களை நினைவுகூர்ந்த நமது பிரதமர் திரு மோடி அவர்கள், நேர்மையின் உருவம் என்று புகழாரம் சூட்டினார். பெருந்தலைவர் கொண்டு வந்த மதிய உணவுடன் கல்வித் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள், தமக்கு உத்வேகமாக அமைந்துள்ளன என்றும் பெருமிதம் தெரிவித்தார். பாரதப் பிரதமர் பொறுப்பேற்கும் அளவுக்குத் தகுதியான தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ஐயா G.K.மூப்பனார் அவர்களை, வளரவிடாமல் முடக்கியதும் காங்கிரஸ் கட்சிதான் என்றும் நமது பிரதமர் அவர்கள் குற்றம் சாட்டினார்.

பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், மிகப்பெரும் இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை நோக்கிப் பயணிப்பதாகக் குறிப்பிட்ட நமது பிரதமர் மோடி அவர்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் என, பல மடங்கு விரைவாக நாடு முன்னேறிக் கொண்டிருப்பதையும், இவை தமிழகத்தையும் உள்ளடக்கியது என்றும், தமிழகமும் இந்த வளர்ச்சியால் பெரிதும் பலனடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். நாட்டில் இரண்டு பாதுகாப்பு வழித்தடங்களில் ஒன்று தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்ட நமது பிரதமர், நாட்டில் 7 ஜவுளிப் பூங்காக்களில் ஒன்று, தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், ரூ.6,000 கோடி மதிப்பில் எஃகு தயாரிப்புத் திட்டத்தின் மூலம், சேலம் உருக்காலை பெரிதும் பலனடையும் என்றும், ரூ.260 கோடி ரயில்வே உட்கட்டமைப்புப் பணிகளும், வந்தே பாரத் ரயில் உள்ளிட்டவையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

உறுதியான தமிழகத்தை உருவாக்க, வலிமையான பாரதத்தை உருவாக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள, தமிழகத் தலைவர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்ற நமது பிரதமர் திரு மோடி அவர்கள், வலிமையான பாரதம் உருவாக, வளர்ச்சியடைந்த பாரதமாக உருவாக, புதிய உயரங்களையும் தொட, அனைத்துத் தலைவர்களின் உழைப்பும், ஒருங்கிணைப்பும் உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

டுத்த ஐந்து ஆண்டுகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஆண்டுகள் என்று குறிப்பிட்ட நமது பிரதமர் திரு மோடி அவர்கள், தமிழகம் முழுவதும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஊழலுக்கு எதிராக முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், உலகின் தொன்மையான மொழி, தம் நாட்டின் மொழியான தமிழ் மொழி என்று தாம் உலகம் முழுவதும் பெருமையுடன் கூறி வருவதாகக் குறிப்பிட்ட நமது பிரதமர் அவர்கள், தமிழ் மொழியைப் பேச இயலாமைக்கு வருத்தம் தெரிவித்ததோடு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, நரேந்திர மோடி தமிழ் பக்கத்தில் தமிழில் பேசுவதை, மக்கள் அனைவரும் கேட்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom