Type Here to Get Search Results !

நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும்... ஸ்டாலின் அறிவிப்பு

 

நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த அரசு எப்போதும் பாடுபடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நான் பணியேற்றிருக்கும் இந்த நேரத்தில் உடன்பிறப்புகளுக்கும் தமிழக மக்களுக்கும் உத்தரவாதம் ஒன்றை அளிக்க விரும்புகின்றேன்.

நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த அரசு எப்போதும் பாடுபடும்.

இந்த அரசு, தமிழ்நாட்டைப் பராமரிப்பதோடு உழவர்களையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாத்துப் பராமரிக்கும் அரசாகத் திகழும்.

இது திமுக தலைவரான என் தலைமையில் அமைந்த அரசு என்றாலும், இது திமுக என்ற கட்சியின் அரசு அல்ல; எந்தவித பேதமும் பாகுபாடும் இல்லாத - எல்லாப் பிரிவினரையும் அரவணைப்புடன் அழைத்துச் செல்லும் - அனைத்து மக்களுக்கும் சொந்தமான தமிழக அரசு; திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தும் தமிழக அரசு என்பதை அழுத்தமாக உணர்த்த விரும்புகிறேன்.

தேர்தல் என்பது மக்களாட்சியின் மாண்புகளுள் ஒன்று. அது போர்க்களமல்ல, ஜனநாயகக் களத்தில் எதிரெதிர் அணிகளாக மோதிக் கொள்வது இயல்பு என்றாலும், நாம் எல்லோரும் ஒருதாய் மக்கள்.

ஒரே இல்லத்தில் அண்ணன் ஒரு கட்சியிலும், தம்பி இன்னொரு கட்சியிலும் இருப்பதைக் காண்கிறோம். எனவே திமுகவை சார்ந்தவர்கள் மாற்றுக் கட்சித் தோழர்களோடும் நட்புணர்வுடன் மக்கள் பிரச்னைகளை அணுகி, அவற்றுக்குத் தீர்வு காண முயல வேண்டும். எல்லா வகைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டுத் தமிழகத்தைத் தலைசிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும். எழுச்சி பெற்ற தமிழகத்தை நமது தலைமுறை அடுத்த தலைமுறைக்கு அளித்துச் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதைப் பொதுமக்களின் ஒத்துழைப்போடும், உடன்பிறப்புகளாகிய உங்கள் ஒத்துழைப்போடும், அலுவலர்களின் ஒருங்கிணைப்போடும் நிறைவேற்றுவோம் என்ற உயர்ந்த நம்பிக்கையுடன் உங்களோடு இணைந்து பணியாற்றவிருக்கிறேன்.

தமிழக மக்கள் தந்துள்ள வெற்றியை கருணாநிதி அவர்களின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கி, அவர் கற்றுத் தந்த அரசியல் - நிர்வாக அனுபவத்தின் துணைகொண்டு, சவால்களையும் நெருக்கடிகளையும் வலிமையுடன் எதிர்கொண்டு, தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் என நான் உறுதியளிக்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom