Type Here to Get Search Results !

இரு மூத்த அதிமுக தலைவர்களால் ஏற்பட்ட சிக்கல்..! பறிபோன பதவி...!


அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமியும் வைத்தியலிங்கமும் மாநிலங்களவை எம்.பி.களாக உள்ளனர். இவர்கள் இருவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டனர். அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், இவர்கள் இருவரும் அமைச்சர்களாகும் ஆசையில் இருந்ததால், களத்தில் இறங்கினர். கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி தொகுதியிலும் வைத்தியலிங்கம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு தொகுதியிலும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் இருவருமே வெற்றி பெற்றனர்.


ஆனால், தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எனவே, வைத்தியலிங்கமும் கே.பி.முனுசாமியும் தற்போதைய நிலையில் மாநிலங்களவை எம்.பி. பதவியைத் தக்க வைத்துக்கொள்வார்களா அல்லது எம்.எல்.ஏ. பதவிகளை ஏற்பார்களா என்ற கேள்வி எழுந்தது.

 வைத்தியலிங்கத்தின் எம்.பி. பதவி அடுத்த ஆண்டு நிறைவடைகிறது என்பதால், அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என்று அதிமுகவில் பேசப்பட்டது. ஆனால், கே.பி.முனுசாமியின் எம்.பி. பதவிக்காலம் 2026 ஏப்ரல் வரை உள்ளது. அதாவது, அடுத்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்போதுதான் கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் நிறைவடைகிறது. எனவே, அவர் எம்.பி. பதவியைத் தக்க வைத்துக்கொள்வார் என்றும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கே.பி.முனுசாமியும் வைத்தியலிங்கமும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர். இருவரும் எம்.எல்.ஏ.க்களாத் தொடர உள்ளதால், எம்.பி பதவியிலிருந்து விலகியுள்ளனர். சட்டப்பேரவையில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் இருந்து, தங்களுடைய பலத்தைக் காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக உள்ளது. எனவே இருவரும் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் எம்.எல்.ஏ. தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பதை இருவரும் தவிர்த்துள்ளனர்.

ஆனால், மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான இடைத்தேர்தல் நடப்பது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே தேர்தல் நேரத்தில் அதிமுகவின் மாநிலங்களவை எம்.பி. முகம்மது ஜான் காலமானார். தற்போது இரண்டு எம்.பி.க்கள் ராஜினாமா செய்துள்ளதால், தமிழகத்தில் 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் பதவிகள் காலியாகியுள்ளன. எனவே, இந்த மூன்று காலியிடங்களும் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 தற்போதையை எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் திமுக கூட்டணிக்கு இரு எம்.பி.க்களும், அதிமுக கூட்டணிக்கு ஒரு எம்.பி. பதவியும் கிடைக்கும். எப்படி இருந்தாலும் திமுகவுக்கு இரண்டு எம்.பி. பதவிகள் லாபம். அதிமுகவுக்கு இழப்பு ஏற்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom