Type Here to Get Search Results !

முதல்வராகும் மு.க. ஸ்டாலின்.... நிழல் நிஜமான வரலாறு


ஏப்ரல் 2 ஆம் தேதி தன் மகள் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடந்த போது "நான் கலைஞரின் மகன், எதற்கும் அஞ்சமாட்டேன்" என்று பெரம்பலூரில் நடைபெற்ற திமுக பிரசாரக் கூட்டத்தில் குறிப்பிட்டார் மு.க. ஸ்டாலின்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கும் அவரது தயாளு அம்மாளுக்கும் பிறந்த இரண்டாவது மகன் மு.க. ஸ்டாலின். சோவியத்  கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மறைந்த சில நாள்களுக்குப் பின் பிறந்ததால் அவருடைய நினைவாக இவருக்கு ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி.

அரசியல் பயணத்தில் ஒரு வெற்றியாளராக இருந்த கருணாநிதியின்  நிழலில் தீவிர அரசியல் பயின்று வளர்ந்தவர் மு.க. ஸ்டாலின்.

சுமார் 49 ஆண்டுகள் திமுகவின் தலைவர் பதவியை வகித்து வந்த  மு. கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு திமுகவின்  தலைவராகக் கட்சியினரால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின். தனது தலைமையை நிரூபிக்கும் வகையில், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39-க்கு 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று பெரும் பலத்தைப் பெற்றது.  2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுக சந்தித்த மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தது.

தமிழகத்தில் இரண்டு பெரும் அரசியல் ஆளுமைகளாக இருந்த ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாமல், தமிழகம் சந்திந்த  முதல்  சட்டப்பேரவைத் தேர்தல் இது.  தற்போது 68 வயதாகும் ஸ்டாலின், திமுகவின் முதல்வர் வேட்பாளராக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டு வெற்றிக் கனியைப் பறித்துள்ளார்.

1967ஆம் ஆண்டு ஸ்டாலினுக்கு 14 வயதாகும்போது, அவரது அரசியல் பயணம்  தொடங்கியது. அப்போது திமுகவுக்காகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டுச்  சிறைக்குச் சென்று 6 மாதங்கள்  சிறைத் தண்டனை அனுபவித்த அவருடைய வாழ்க்கை பின்னர் முழுநேர அரசியலாக மாறியது. 

சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் முடித்த ஸ்டாலின், திமுகவின் இளைஞரணியை உருவாக்கி சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் தலைவராக இருந்தார். இவர்தான் சென்னை மேயராக முதல் முறையாக நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டார். சென்னை மேயராக 1996 முதல் 2002 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார் மு.க. ஸ்டாலின். 

1989, 1996, 2001, 2006 ஆம் ஆண்டுகளில் ஸ்டாலின் ஆயிரம் விளக்கிலிருந்து பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 2011, 2016 ஆம் ஆண்டுகளில் கொளத்தூர் தொகுதியிலிருந்து எம்எல்ஏ ஆனார் ஸ்டாலின்.

2006ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் உள்ளாட்சி நிர்வாகம் - ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.  2009 - 2011ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் துணை முதல்வராகவும் ஸ்டாலின் பதவி வகித்தார்.

2016-ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்டாலின், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.

1967-ஆம் ஆண்டு முதலே தமிழக மக்கள் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கே மாறி மாறி வாக்களித்து வெற்றி பெற வைத்து வருகிறார்கள். ஆனால், கடந்த இரு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. தற்போது தமிழகத்தை ஆளும் வாய்ப்பை மக்கள் ஸ்டாலினுக்கு வழங்கியுள்ளனர். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தின் ஆட்சியை திமுக பிடித்துள்ளது. 

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளுடன் இணைந்து திமுக தேர்தலை எதிர்கொண்டது.

ஏப்ரல் 6-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைஇன்று நடைபெற்றது. வெற்றி - முன்னிலைப் பட்டியலில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில் தமிழக முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின்.


கடந்து வந்தப் பாதை


திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த  மு. கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின், தந்தையின் நிழலில் நேரடி அரசியல் பயின்று வளர்ந்தவர்.

சோவியத் புரட்சித் தலைவர் ஜே.வி. ஸ்டாலின் மறைந்த சில நாள்களில் பிறந்த இவருக்கு அவர் நினைவாக  ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி.

1967 - 68 - கோபாலபுரம் இளைஞர் திமுக தொடக்கம்.  14 வயதில் திமுகவுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்து அரசியல் பயணம் தொடக்கம்.

1973 - திமுக பொதுக்குழு உறுப்பினர்.

1976 - அவசர நிலைக் காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறை.

1996-2002 - மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாநகர மேயர். 

1989, 1996, 2001, 2006 - ஆயிரம்விளக்கு எம்.எல்.ஏ.

2011, 2016 - கொளத்தூர் எம்.எல்.ஏ.

2003 - திமுக துணைப் பொதுச் செயலர்

2006 - 2011 - கருணாநிதி அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர்.

2009 - 2011 - துணை முதல்வர்

2017 - திமுக செயல் தலைவர்

2018 - கருணாநிதியின் மறைவுக்குப் பின் திமுக தலைவர்.

2021.. முதல்வராகும் ஸ்டாலின்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom