Type Here to Get Search Results !

அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தந்தை உடல் நலக்குறைவால் மரணம்...


தமிழக வருவாய்த்துறை அமைச்சரான ஆர்.பி.உதயக்குமாரின் தந்தை ஆர்.போஸ் (68) கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அமைச்சருடன் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள டி.குன்னத்தூரில் வசித்து வந்த அவருக்கு, இரு தினங்களுக்கு முன்பு உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. 

இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அமைச்சரின் தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு  7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். நேற்று முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை சென்றிருந்த அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், இந்த சோகமான செய்தியைக் கேள்விப்பட்டு உடனடியாக சொந்த ஊர் திரும்பினார். 

ஆர்.பி.உதயக்குமார் தந்தையின் உடல் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூர் எம்ஜிஆர், ஜெயலலிதா கோவில் வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

இன்று அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாரின் தந்தை உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.  அதன் பின்னர் அமைச்சர் தந்தையின் உடல் எம்ஜிஆர், ஜெயலலிதா கோவில் வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அமைச்சர் தந்தையின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு ஆர்.பி.உதயகுமார்  அவர்களின் தந்தை திரு. ஆர்.போஸ் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.திரு.ஆர்.போஸ் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom