Type Here to Get Search Results !

ஓபிஎஸ் இதுவரை ஒருமுறைக்கூட தோல்வியடைந்ததில்லை...... கடந்து வந்த பாதை.....!

 

தமிழகத்தின் துணை முதல்வராகவும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் போடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். ஓபிஎஸ் என்று பரவலாக அனைவராலும் சொல்லப்படும் ஓ.பன்னீர் செல்வம் இதுவரை தான் போட்டியிட்ட தேர்தல்களில் வெற்றியை மட்டுமே சுவைத்துள்ளார். ஓபிஎஸ் இதுவரை ஒருமுறைக்கூட தோல்வியடைந்ததில்லை.

எம்ஜிஆர், என்டிஆர் வரிசையில் ஓபிஎஸ் என்ற மூன்றெழுத்தும் அதிகம் உச்சரிக்கப்பட்ட எழுத்துக்கள். ஓபிஎஸ் தனது 31வது வயதில் அரசியலில் அடியெடுத்து வைத்தார், 1982ல் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் ஆனார். இப்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வராகவும் பதவி வகிக்கிறார்.

போடி நாயக்கனூர் தொகுதியில் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ளது போடி சட்டமன்ற தொகுதி. இங்கு போடிநாயக்கனூர் தாலுகா, தேனி தாலுகாவின் குறிப்பிட்ட சில பகுதிகள் கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், தாடிச்சேரி, தப்புக்குண்டு, உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, பூமலைக்குண்டு மற்றும் ஜங்கால்பட்டி வருவாய் கிராமங்கள், பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, குச்சனூர், மார்க்கையன்கோட்டை பேரூராட்சி, பொட்டிபுரம், சங்கராபுரம், பூலாநந்தபுரம், புலிக்குத்தி வருவாய் கிராமங்களின் குறிப்பிட்ட சில பகுதிகள் அடங்குகிறது.

ஓ.பன்னீர் செல்வம் பயோடேட்டா

ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். இவரது அப்பா ஓட்டக்காரத்தேவர். அம்மா பழனியம்மாள். ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகள்.

பன்னீர்செல்வத்திற்கு அவரது அப்பா தனது குல தெய்வமான பேச்சியம்மன் பெயரை நினைவில் கொண்டு 'பேச்சிமுத்து' என பெயரிட்டார். பின்னர் பன்னீர்செல்வம் என பெயர் மாற்றப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு தற்போது வயது 70.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்தார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு கவிதாபானு என்ற மகளும் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்ற மகன்களும் உள்ளனர்.

ஒருங்கிணைந்த திமுகவின் தொண்டராக 1969ல் தனது 18வயதில் அரசியல் வாழ்க்கையை துவங்கினார் பன்னீர்செல்வம்.

பி.ஏ.வரை படித்திருந்தாலும் பிழைப்பிற்காக பால் பண்ணை நடத்தினார். பின்னர், தனது நண்பருடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்கடை ஆரம்பித்தார்.

  • 1987ல் எம்ஜிஆர் இறந்தபிறகு, ஜெயலலிதா, ஜானகி என அதிமுக இரண்டானது. ஜானகி அணியில் புகழோடு இருந்த கம்பம் செல்வேந்திரன் புண்ணியத்தில் பெரியகுளம் ஜானகி அணிக்கு ஓபிஎஸ் நகர செயலாளரானார்.
  • 1989ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் சிவாஜி கட்சியான தமிழக முன்னேற்ற முன்னணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக பணிபுரிந்தார். 1991ல் அதிமுக ஒருங்கிணைந்தது. இதையடுத்து முதன்முதலில் பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநரானார்.

  • 1996ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்காலகட்டத்தில் பெரியகுளம் அதிமுக நகர செயலாளராக இருந்த ஓபிஎஸ்சுக்கு பெரியகுளம் நகர்மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட சீட் கிடைக்கவே தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2001ஆம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார்.
  • டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக 2001ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது. தேர்தலில் வெற்றி பெற்று வருவாய்த்துறை அமைச்சராக 2001ஆம் ஆண்டு மே 19 முதல் 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி வரை பதவி வகித்தார்
  • 2001ஆம் ஆண்டு டான்சி வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்த போது சசிகலாவால் முதல்வர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். ஜெயலலிதா விடுதலை ஆன பின் 2002ம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சராக 2002 மார்ச் 2 முதல் 2006 மே வரை பதவி வகித்தார்.
  • 2006ம் ஆண்டு தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆவது முறையாக எம்.எல்.ஏ ஆனார். தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் எதிர்கட்சி துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.
  • 2011ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதி அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், அவை முன்னவர் என்று மே 16ஆம் தேதி 2011 முதல் 28, செப்டம்பர் 2014 வரை பணியாற்றினார்.
  • கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வருமானத்தை மீறி சொத்துக் குவித்த ஊழல் வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தவுடன் அவர் முதல்வர் பதவி பறிபோனது. 28ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஒரு மனதாக சட்டமன்ற கட்சி தலைவராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வானார்.
  • 2016ஆம் ஆண்டு மீண்டும் போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா அமைச்சரவையில் நிதியமைச்சரானார். உடல்நலக்குறைவினால் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் மூன்றாவது முறையாக முதல்வரானார். சசிகலாவின் நிர்பந்தத்தினால் பதவியை ராஜினாமா செய்தார்.
  • 2017ஆம் ஆண்டு சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுக இரண்டாக பிளவு பட்டது. சசிகலா சிறை சென்ற பின்னர் மீண்டும் அதிமுக ஒன்றாக இணைந்தது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரானார். துணை முதல்வராகவும், நிதியமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.

பெரியகுளம் தொகுதியில் 2 முறை வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வம் கடந்த 2011ஆம் ஆண்டு போடி நாயக்கனூர் தொகுதிக்கு மாறினார். போடி சட்டசபைத் தொகுதியில் தற்போது மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் ஓ.பன்னீர் செல்வம். தான் போட்டியிட்ட தேர்தல்களில் ஒருமுறை கூட தோல்வியடையான ஓ.பன்னீர் செல்வம் இந்த முறை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற நட்சத்திர அந்தஸ்துடன் களமிறங்குகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom