கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.... வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.... ராமதாஸ்

 

அதிமுகவை ஆட்சியில் அமர்த்த, பாட்டாளிகளின் கோட்டையான 121 தொகுதிகளில் தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

வன்னியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக கடந்த40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறேன் என்றாலும்கூட, அந்த இடஒதுக்கீட்டை தற்போது வழங்கியுள்ளது முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுதான். நமது சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு 10.5 சதவீத இடப்பங்கீட்டின் மூலம் அடித்தளம் அமைத்துள்ள அதிமுகவுக்கு நாம் என்ன நன்றிக்கடன் செலுத்தப் போகிறோம். அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதுதான் அந்தக் கட்சிக்கு பாட்டாளி சொந்தங்கள் செலுத்தும் நன்றிக் கடனாக இருக்கும்.

சென்னையில் தொடங்கி வடதமிழகத்தின் அனைத்து தொகுதிகள், மேற்கு தமிழகத்தின் அனைத்துதொகுதிகள், காவிரி பாசன மாவட்டங்களின் பெரும்பான்மையான தொகுதிகள் என தமிழகத்தில் 121 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் பாட்டாளிகள்தான். வீடு வீடாக, கிராமம் கிராமமாக, ஒன்றியம் ஒன்றியமாக, தொகுதி தொகுதியாகச் சென்று அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக இன்று முதலே பாமகவினர் திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

கடுமையான நெருக்கடிகளுக்கு இடையிலும் அதிமுக இட ஒதுக்கீடு அளித்தது குறித்தும், அதை பொறுத்துக்கொள்ள முடியாமல், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 10.5 சதவீத இடப்பங்கீட்டை ஒழித்துக்கட்ட திமுகவும், அதன் தலைமை குடும்பத்தினரும் சதி செய்வது குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அமைதியான முறையில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தி, அதன்மூலமாகவும் பிரச்சாரம் செய்யலாம்.

நமது கோட்டையாக திகழும் 121 தொகுதிகளில் நமது முயற்சியால், உழைப்பால், பங்களிப்பால் அதிமுக தலைமையிலான கூட்டணிவேட்பாளர்கள் வெற்றி பெறவேண்டும். இந்த 121 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் எந்தக் கட்சிவேண்டுமானாலும் போட்டியிடலாம். யார் வேண்டுமானாலும் வேட்பாளராக களமிறக்கப்படலாம். அதைப்பற்றி பாமகவினர் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் இன்று முதலே களத்தில் இறங்கி அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Post a comment

0 Comments