Type Here to Get Search Results !

தேமுதிக கடந்து வந்த பாதை..... !


தேமுதிக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை வரை 1120 நபர்கள் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கடந்த காலங்களில் தேமுதிகவின் தேர்தல் அரசியல் எவ்வாறு இருந்தது என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கறுப்பு எம்.ஜி.ஆர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். தன்னுடைய ரசிகர் மன்றத்தின் மூலம் மக்களுக்கு அவ்வபோது உதவிகளை செய்து வந்த விஜயகாந்த் 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி அன்று மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி கொடியையும் அறிமுகம் செய்தார்.

அதற்கு அடுத்த ஆண்டிலேயே சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது அக்கட்சி. கடவுளும் மக்களும் தான் தன்னுடைய கூட்டணி என்ற சித்தாந்த்தை அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது தேமுதிக. அனைத்து இடங்களில் போட்டியிட்டாலும் கூட விருதாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார். அப்போது அக்கட்சிக்கு கிடைத்த வாக்கு வங்கி என்பது மிகப்பெரியது. 8.45% வாக்குகளை பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக வளரத்துவங்கியது விஜயகாந்தின் தேமுதிக.

அதனை அடுத்து வந்த 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்தே தேமுதிக. கட்சியின் வளர்ச்சி வீதம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்த ஆங்காங்கே கூட்டணி வாய்ப்புகள் தேமுதிகவை தேடி வந்தன. இருப்பினும் தனித்தே தேர்தலில் களம் கண்டது தேமுதிக.39 தொகுதிகளில் போட்டியிட்ட போதும் அனைத்திலும் தோல்வி. மேலும் டெபாசிட்டை இழந்தது அக்கட்சி. ஆனால் 10% என்ற வலுவாக வாக்கு வங்கியை வைத்திருந்தது.

முந்த சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியை சந்தித்த அதிமுக தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்க, வாக்கு வங்கியை சட்டமன்ற நுழைவுக்கான வாய்ப்பாக பயன்படுத்த நினைத்தது தேமுதிக. 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியுடன் இணைந்து 29 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றது தேமுதிக. ஆனாலும் அந்த கூட்டணி வெகுநாட்களுக்கு சோபிக்கவில்லை என்பது தான் உண்மை. கூட்டணி உடைய எதிர்க்கட்சி அந்தஸ்த்தை கைப்பற்றியது தேமுதிக. குறைவான இடங்களில் போட்டியிட்ட காரணத்தால் தேமுதிகவின் வாக்கு வங்கி 7.88% ஆக குறைந்து போனது.

2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது தேமுதிக. அந்த கூட்டணியில் பாமகவும் உடன் இருக்க, 14 இடங்களில் போட்டியிட்டது தேமுதிக. ஆனால் மக்களவை செல்வதற்கான வாய்ப்பினை மக்கள் தேமுதிக வேட்பாளர்களுக்கு அந்த தேர்தலின் போது வழங்கவில்லை. 5.19% ஆக வாக்கு வங்கி சரியத் துவங்கியது.

மதிமுக, வி.சி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தாமக கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள் நல கூட்டணியாக மக்களிடம் சென்றனர் தேமுதிகவினர். 2016ம் ஆண்டுக்கான தேர்தலின் போது அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு மாற்றாக தங்களை முன்னிறுத்தியது மக்கள் நலக் கூட்டணி. இந்த தேர்தலின் போது 104 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. ஆனால் அதில் ஒரு இடத்திலும் கூட வெற்றி பெறவில்லை தேமுதிக. உளுந்தூர் பேட்டையிலும் தோல்வியை சந்தித்தார் விஜயகாந்த். டெபாசிட்டை இழந்தது அக்கட்சி. வாக்கு வங்கியை அதிகரிக்க திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல்களில் தேமுதிக போட்டியிட்டது. ஆனாலும் கூட எந்த தொகுதியிலும் வெற்றியை உறுதி செய்ய இயலவில்லை தேமுதிகாவால். 1%க்கும் குறைவாக வாக்குகளை அந்த கட்சி பெற்றது.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இணைந்து களம் கண்டது தேமுதிக. கள்ளக்குறிச்சி, வடசென்னை, திருச்சி மற்றும் விருதுநகர் போன்ற நான்கு மக்களவை தொகுதியில் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது தேமுதிக. ஆனாலும் கூட எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. தற்போது வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் களம் இறங்க இருப்பதாக தேமுதிக அறிவித்தாலும் கூட, மூன்று கட்டமாக நடைபெற்று வரும் தொகுதி பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் மக்களோடு மட்டும் தான் கூட்டணி என்று ஆரம்பித்து வெற்றிக்கதையை துவங்கியது தேமுதிக. கூட்டணி வைத்துக் கொள்ள பெரிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. ஆனால் 15 வருடங்கள் கழித்து கட்சி கூட்டணிக்குள் இருக்கும் பெரிய கட்சி தரும் இடங்களிலேயே போட்டியிட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom