Type Here to Get Search Results !

சசிகலாவின் பயணம் குறித்து அவரது மன்னார்குடி உறவினர்கள் பேச்சு

 

பெங்களூருவில் இருந்து சென்னை வந்த வி.கே.சசிகலா, தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்கினார். இதன்பிறகு, `தீவிர அரசியலில் ஈடுபடுவேன், மக்களைச் சந்திப்பேன்' என உறுதியாகக் கூறியவர், அதற்கேற்ப அரசியல் கட்சித் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார்.

நடிகர் சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலரும் சசிகலாவை சந்தித்துப் பேசினர். அதே நேரம், அ.தி.மு.கவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் யாரும் சசிகலாவை சந்திக்கவில்லை. மேலும், `அ.தி.மு.கவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை' என முதல்வர் பழனிசாமி கூறியதும் சசிகலா தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக மார்ச் 3 ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்ட சசிகலா, ` நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன். நான் என்றும், பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் நன்றியுடன் இருப்பேன். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன். ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றவேண்டும். நம் பொது எதிரி திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட வேண்டும். என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி' எனக் குறிப்பிட்டார்.

இதன்பிறகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே முடங்கியிருந்தார். இதுகுறித்து டி.டி.வி.தினகரனும், `அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக சசிகலா கூறியிருப்பது அவரின் விருப்பம். அதேநேரம், தேர்தலுக்குப் பிறகு சசிகலாவை திரும்ப அரசியலுக்கு வருமாறு வலியுறுத்துவேன்' என்றார்.

இந்நிலையில் குலதெய்வ கோயில் வழிபாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக இன்று தஞ்சாவூர் சென்றுள்ளார் சசிகலா. வரும் 20 ஆம் தேதி அவரது கணவர் ம.நடராசனின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் வருவதால் அதில் பங்கேற்கும் முடிவில் இருக்கிறார் சசிகலா.

பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் சில தகவல்களைத் தெரிவித்தனர். ``அரசியலில் இருந்து ஒதுங்கியதாக அறிக்கை வெளியிட்ட பிறகு, வெறும் பார்வையாளராக மட்டுமே அரசியலில் நடப்பதை அவர் கவனித்துக் கொண்டு வருகிறார். அ.ம.மு.க, அ.தி.மு.க என யாருக்கும் ஆதரவு கொடுக்காமல் உறவினர்களோடு நேரத்தைச் செலவிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

மன்னார்குடியைச் சேர்ந்த தேவாதி என்ற அர்ச்சகர் ஒருவர் தி.நகரில் சிறிய அளவில் பெருமாள் கோவில் ஒன்றில் பூஜை நடத்தி வருகிறார். சசிகலாவுக்கு நன்கு அறிமுகமான அந்த அர்ச்சகரின் ஆலயத்தில் அண்மையில் சசிகலா வழிபாடு நடத்தினார். குடும்பத்தினருக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் சில சம்பவங்களில் இருந்து மன நிம்மதிக்காகவும் அவர் கோயிலுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்" என்கின்றனர்.

தொடர்ந்து பேசுகையில், ``தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள நடராசனின் வீட்டுக்கு நேற்று சசிகலா வந்துவிட்டார். இன்று காலை 10 மணியளவில் கோயிலுக்கு வருவார்' என ஊடகங்களுக்குத் தகவல் தரப்பட்டது. அவரது வருகையையொட்டி தடபுடலாக ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால், 8 மணிக்கே அவர் விளார் கிராமத்தில் உள்ள நடராசனின் குலதெய்வமான வீரனார் கோவிலுக்கு வந்துவிட்டார். இதற்குக் காரணம், `மீடியாக்களின் கேள்விகளை எதிர்கொள்ளக் கூடாது' என உறுதி காட்டியதுதான். அவருடன் தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷும் வந்திருந்தார்.

பின்னர், நடராஜனின் சகோதரர்கள் ராமச்சந்திரன், பழனிவேல் ஆகியோரின் பேர குழந்தைகளுக்கு நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்றார். இதன்பிறகு கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார். அரசியல் ரீதியாகவும் ஜாதகரீதியாவும் சோதனையான காலகட்டத்தில் இருப்பதால், `குலதெய்வ வழிபாடு கோடி நன்மையைத் தரும்' என குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் வீரனாரை வழிபட வந்தார் சசிகலா. தனது கணவர் இல்லாத சூழலும் பேரக் குழந்தைகளின் காதணி நிகழ்வையும் பார்த்தவர் தன்னையறியாமல் கண் கலங்கிவிட்டார்" என்கின்றனர்.

மேலும், ``இதன் பிறகு திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். அங்கு செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, `சாமி கும்பிட மட்டும்தான் வந்தேன். வேறு எதற்காகவும் அல்ல' என கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார். தொடர்ந்து கும்பகோணத்தில் தங்கி நவக்கிரக வழிபாடுகளை நடத்த உள்ளார். இன்று குலதெய்வ கோயிலில் அ.ம.மு.க நிர்வாகிகள் அவரைச் சந்திக்க வந்துள்ளனர். அவர்களிடமும் அவர் எதையும் பேசவில்லை" என்றனர்.

விளாரில் உள்ள வீரனார் கோவிலில் ம.நடராசனால் செதுக்கி வைக்கப்பட்டிருந்த சில வாசகங்களும் இன்று அனைவர் கவனத்தையும் ஈர்த்தன. ` நீதியும் தருமமும் கடவுளே,' `நட்பும் நன்றியும் மறவோம்' என அதில் கூறப்பட்டிருந்தது. `அ.தி.மு.கவில் சசிகலாவுக்கான இடம் மறுக்கப்பட்டதை சுட்டிக் காட்டும்விதமாகவே இந்த வாசகங்கள் இருக்கின்றன' எனவும் மன்னார்குடி உறவுகள் பேசி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom