Type Here to Get Search Results !

எடப்பாடியாரின் அறிவிப்பு அனைவருக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கும்.... புகழ்ந்து தள்ளிய ராமதாஸ்.....


குடியுரிமைச் சட்டத் திருத்த போராட்டம் மற்றும் கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரானப் போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்றவர்கள் மீதும், கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.

கடையநல்லூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இன்று பேசிய முதல்வர், இந்த தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். இது மிகவும் சரியான நடவடிக்கை ஆகும். குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டமாக இருந்தாலும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் அவை உள்நோக்கங்கள் கொண்ட போராட்டங்கள் அல்ல. தங்களின் உரிமைகள் பறிக்கப் பட்டு விடுமோ? அணுக்கதிர் வீச்சுக்கு ஆளாகி விடுவோமோ? என்ற அச்சத்தின் காரணமாகத் தான் அந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல வடிவிலான இயக்கங்கள் நடத்தப்பட்டன. கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறது. அதேபோல், கொரோனா காலத்தில் ஊரடங்கு ஆணையை மீறி நடமாடியவர்கள் மீதான வழக்குகளும் திரும்பப்பெற வேண்டியவையே. இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மீதும் இந்த மூன்று வகையான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் அவர்களின் எதிர்காலத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் தான் இந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்று பல்வேறு தருணங்களில் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இப்போது இந்த வழக்குகளை திரும்பப் பெறுவதாக முதல்வர் அறிவித்திருப்பது இந்த பாதிப்புகளை போக்கி உள்ளது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom