Type Here to Get Search Results !

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் மனம் குளிர்ந்த டிடிவி தினகரன்..... அமமுக அதிரடி அறிக்கை...!


தமிழகத்திற்கு ஒரே ஆண்டில் 1.70 லட்சம் கோடி கடன் அதிகரித்திருப்பது பெரும் கவலையை அளிக்கிறது எனவும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்காதது ஏமாற்றம் தருகிறது எனவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

தமிழக அரசின் கடன் தொகை ஒரே ஆண்டில் 4 லட்சம் கோடியில் இருந்து 5.60 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருப்பது பெரும் கவலை அளிக்கிறது. சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், ஒரு வருட காலத்தில் எதிர்பார்த்ததைவிட வரி வருவாய் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுவிட்டு, இன்னொரு பக்கம் அரசின் கடன் தொகையும் அதிகரித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது நகைமுரணாக உள்ளது. 

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட நாடே செயல்படாத நிலையில், வளர்ச்சிப் பணிகள் வழக்கமான திட்டங்கள் பெருமளவில் அமல்படுத்தப்படாத நிலையில் தமிழக அரசு ரூபாய் 1 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது அரசின் செலவினங்கள் வெளிப்படைத் தன்மையோடு இல்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி அளவிற்கு அதிகமாக கடன் வாங்கியுள்ள நிலையிலும் நடப்பு நிதி ஆண்டில் பற்றாக்குறை 84 ஆயிரம் கோடியாக இருக்கும் என்ற அறிவிப்பு அரசின் நிர்வாகத் திறமை உண்மையை தெளிவாக காட்டுகிறது. முதலமைச்சரின் நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் 18,750 கோடி ரூபாய் நிதி வாரிவழங்கி இருப்பது பல்வேறு கேள்விகளையும் மக்களிடம் எழுப்பி இருக்கிறது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களுக்கான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு செலவினை அரசே ஏற்கும் என்று அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். 

பேரிடர் காலத்தில் அழிவுக்குள்ளாகும் நெற்பயிருக்கான இழப்பீடு ஏக்கருக்கு ரூபாய் 13 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மேற்கண்ட இரண்டு திட்டங்களையும் முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுத்துவது முக்கியமானதாகும். பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை மேற்கு வங்கம், ராஜஸ்தான், அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் குறைத்திருப்பது போல தமிழகத்தில் குறைத்து அறிவிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், செஸ் வரியை மட்டும் குறைக்குமாறு மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப் போவதாக அறிவித்திருப்பது ஏமாற்றம் தருகிறது. மொத்தத்தில் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற அறிவிப்புகள் இல்லாமல் பெயர் அளவிற்கான அறிக்கையாக அமைந்திருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom