Breaking

6/trending/recent
Type Here to Get Search Results !

அதிமுக கூட்டணியில் இந்தத் தொகுதியில் பாஜக போட்டியிட வாய்ப்பு.....


லிட்டில் இங்கிலாந்து என்று அழைக்கப்படும் குளிர்ப் பிரதேசமான தளி தொகுதி காடுகள், மலைகள் சூழ்ந்த இயற்கை வளம் கொண்ட தொகுதியாகத் திகழ்கின்றது.

இத்தொகுதியில் காடுகள் நிறைந்த மலைக்கிராமங்கள் அதிக அளவில் உள்ளன. தேன்கனிக்கோட்டையில் யாரப் தர்கா சிறப்பு வாய்ந்ததாகும். அதேபோல பேட்டராயப் பெருமாள் கோயில் பிரசித்தி பெற்றதாகும்.

தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய இரண்டு பேரூராட்சிகள், 68 ஊராட்சிகளைக் கொண்ட இத்தொகுதி கடந்த 1977 ஆம் ஆண்டு உதயமானது. இதுவரை 10 சட்டப்பேரவை தேர்தல்களைச் சந்தித்துள்ளது.

வாக்காளர்கள் விவரம்

ஆண்கள்:  1,23,782; பெண்கள்: 1,16,679; மூன்றாம் பாலினத்தவர்: 13; மொத்தம்:  2,40,474

தொகுதிப் பிரச்னைகள்

மலைக் கிராமங்களில் போதிய படிப்பறிவு இல்லாத காரணத்தால் இளம் வயது திருமணங்கள் அதிகளவில் நடப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. அதேநேரத்தில் மேல்படிப்புக்காக ஒசூர், கிருஷ்ணகிரி ,பெங்களூர் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, உயர்கல்வி கற்க, தளி பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

மேலும், படித்த இளைஞர்கள் வேலை தேடி ஒசூர், பெங்களூர், வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், இப்பகுதியிலேயே தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

விவசாயம் சார்ந்த தொழில்களே இங்கு பிரதானத் தொழிலாகும். அறுவடைக் காலங்களில் யானைகள் மற்றும் வனவிலங்குகள் தொந்தரவு அதிக அளவில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, யானைக் கூட்டங்களைக் கட்டுப்படுத்த அரசு மேலும் பல்வேறு இடங்களில் மின்வேலி அமைத்து கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

தளி ஏரிக்கு நீர் கொண்டுவந்து மக்களின் பயன்பாட்டிற்கும்,  பொழுதுபோக்கிற்காக வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் வேண்டுகோள்.

அஞ்செட்டி பகுதியில் தொட்டல்லா அணைத் திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதால் அதை அரசு நிறைவேற்ற வேண்டும். இதனால் இப்பகுதியில் குடிநீர்த் தேவை மட்டுமின்றி விவசாயத்துக்கு உதவுவதுடன், நிலத்தடி நீரும் உயரும். மேலும், மலைக் கிராமங்களில் சாலை வசதி இல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படுவதாகவும், எனவே, சாலையை மேம்படுத்த வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்

அதேபோல, மருத்துவமனையை தரம் உயர்த்தி கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மலைப்பகுதிகளில் பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதால்  சாலையை விரிவுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

தளி அருகே அரசு சார்பில் கொய் மலர் உற்பத்தி செய்ய இஸ்ரேல் நாட்டு உதவியுடன் விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சிறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் ரோஜாச் செடி நாற்றங்காலுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்குவதில்லை; இது வணிகம் சார்ந்தது என அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது, ஆனால் இதற்கு குறைந்த தொகையை வசூலிக்கலாம் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய ஆள்கள் பற்றாக்குறை உள்ளது. ஏனெனில் ஏரி பராமரிப்புப் பணிகளுக்கு ஆள்கள் அழைத்துச் செல்வதால் தோட்டப் பணிகளுக்கு கூலி ஆள்கள் கிடைப்பதில்லை. எனவே, விவசாயிகளுக்கு அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். அஞ்செட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒன்றியம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் தாலுகாவாக மாற்றியது ஏமாற்றம் அளிப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

அரசியல் நிலவரம்

இதுவரை நடைபெற்ற 10 சட்டப்பேரவைத் தேர்தல்களில், காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும், திமுக, ஜனதா கட்சி, பாஜக, சுயேச்சை ஆகியவை தலா ஒரு முறையும் வென்றுள்ளன.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக வேட்பாளர் ஒய்.பிரகாஷ் வெற்றி பெற்றார். இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.ராமசந்திரனைவிட 6,245 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தார்.

(திமுக வேட்பாளர் ஒய்.பிரகாஷ் பெற்ற வாக்குகள்: 74,429. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன்  பெற்ற வாக்குகள்: 68,184. வாக்கு வித்தியாசம்:  6,245).

இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான டி.ராமசந்திரன் சிபிஐ சார்பில் போட்டியிட விருப்பமனு அளிக்கவுள்ளார்.

அதேபோன்று திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், திமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. ஒரே கூட்டணியில் இருவரும் இருப்பதால் யாருக்கு தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக இந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.  ஏற்கெனவே இந்தத் தொகுதியில் மாநில துணைத் தலைவர் நரேந்திரன் தளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். முரளிதரன் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எனவே, அதிமுக கூட்டணியில் இந்தத் தொகுதியில்  பாஜக போட்டியிட வாய்ப்புகள் அதிகம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.