புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. அவரை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரி வந்தன. கிரண்பேடிக்கு எதிராக பலமுறை போராட்டம் நடத்திய நாராயணசாமி, அண்மையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் சந்தித்து, அவரை நீக்க வேண்டும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் அரசியல் சூழல் மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர். இதனால், நாராயணசாமி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. விரைவில் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாராயணசாமி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று புதுச்சேரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.
இதற்கிடையே அதிரடி திருப்பமாக துணை நிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடியை நீக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும் புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு வழங்கியும் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனால், புதுச்சேரி அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
No comments
Post a comment