Breaking

6/trending/recent
Type Here to Get Search Results !

ஜெயலலிதா பிறந்த நாள்: வரும் 24-ஆம் தேதி ஜெயல‌லிதா சிலைக்கு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் மரியாதை செலுத்துகின்றனர்


மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு வரும் 24-ம் தேதி ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் மரியாதை செலுத்துகின்றனர் என அதிமுக தலைமைக்கழகம், அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் இன்று வெளியிட்டனா்.

அதில், அதிமுக நிரந்தரப் பொதுச் செயலாளராகவும், தமிழ் நாடு முதலமைச்சராகவும் அரும்பணியாற்றிய ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாளான 24.2.2021 - புதன் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு, ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றிவைத்து, இனிப்பு வழங்க உள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்; இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு முதலமைச்சர்
எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோர்,``நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ்’’ சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள ``ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை’’ வெளியிட உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்டக் செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், உடன்பிறப்புகளும் ``கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும்’’ பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நம் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் ஜெயலலிதா தமது பிறந்த நாளையொட்டி, ``ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, உடன்பிறப்புகள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை-எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்தால், அந்நிகழ்வுகள் பயன்பெறுவோரையும் மகிழ்விக்கும், இம்மண்ணில் தமிழக மக்களுக்காக உழைத்திடும் பெருவாய்ப்பு பெற்ற என்னையும் அது மேலும் உற்சாகப்படுத்தும்’’ என்றும்; ``எளிமையோடும், எளியோருக்கு உதவிடும் நல்ல நோக்கத்தோடும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம் என் அன்புக்குரிய கண்மணிகளால் பயன்பெறும் வறியவர்களின் முகத்தில் படரும் புன்னகை ஒன்றே நம்மையும், நம் ஒப்பில்லா இயக்கத்தையும் ஆராதிக்கின்ற நிகழ்வாக அமையும் என்பதை கழக உடன்பிறப்புகள் உணர்ந்து செயல்பட வேண்டும்’’ என்றும், ஜெயலலிதா நமக்கெல்லாம் ஏற்கெனவே அறிவுறுத்தியதைப் போல், ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுகவில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகள் அனைவரும் தத்தமது பகுதிகளில், கண் தானம், ரத்ததானம் செய்தல்; மருத்துவ முகாம் நடத்துதல்; கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல்; மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல்; இலவச திருமணங்களை நடத்தி வைத்தல்; ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல்; வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர். 

Post a comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad