Type Here to Get Search Results !

அதிமுக - பாமக கூட்டணி தொடருமா..? அடுத்து நடப்பது என்ன...?


வன்னியர் சமுதாயத்துக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். பொங்கலுக்கு முன்பாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக நெருக்கடி கொடுத்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. இதற்கிடையே கடந்த 23-ம் தேதியன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியிடமும் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தனர். ஆனால், இட ஒதுக்கீடு நிறைவேறும் வரை கூட்டணி பேச்சுவார்த்தை கிடையாது என்று அவர்களிடம் டாக்டர் ராமதாஸ் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

இதற்கிடையே தொடர் போராட்டங்களை நடத்திவரும் பாமகவின் கோரிக்கை மீது அதிமுக பெரிய ரியாக்‌ஷன் காட்டவில்லை என்ற கோபத்தில் டாக்டர் ராமதாஸ் உள்ளார். அதிமுகவிடமிருந்து சாதகமான பதில் வராத நிலையில், அரசியல் ரீதியான முடிவை அறிவிப்போம் என்று பாமக மிரட்டி வருகிறது. இந்நிலையில் பாமக சார்பில் இன்று அவசர நிர்வாக குழு கூட்டம் காணொலி காட்சி மூலம்  நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுக கூட்டணில் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து பாமக முடிவெடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 கூட்டணியை விட்டு விலகும் முடிவை பாமக எடுத்துவிடக் கூடாது என்பதற்காக பாமகவை சரிகட்டும் பணியில் அதிமுகவும் களமிறங்கியுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை திண்டிவனம் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் நேற்று இரவு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

கூட்டணியைவிட்டு விலகும் முடிவை எடுக்க வேண்டாம் அதிமுக சார்பில் பாமகவை வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாமகவின் இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்று அப்போது ராமதாஸ் அமைச்சர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பாமக இறுதியான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்துக்குப் பிறகு கூட்டணிகள் இறுதி செய்வது, தொகுதிகள் ஒதுக்கீடு, பிரசாரம் எனப் பல கட்டப் பணிகள் இருப்பதால், பாமக இன்று இறுதியான முடிவை எடுக்கும் என்று அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனவே, இன்றைய கூட்டத்தில் பாமக கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom