Type Here to Get Search Results !

நாளை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்


தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் 31-ந் தேதி (நாளை) நடைபெறும். இந்த மையங்களில் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற தகுந்த கொரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல் மற்றும் கை கழுவுதல் கட்டாயமாகும்.

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் அல்லது மற்ற தொற்று கொரோனா தொடர்பாக இருந்தால் மையங்களுக்கு அனுமதிக்கக்கூடாது. சொட்டு மருந்து கொடுக்கும் மையங்களில் கூட்டமாக இருப்பதை தவிர்க்கவேண்டும். சொட்டு மருந்து கொடுக்கும் குழந்தைகளுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன்பு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் ‘மை' வைக்கப்படும். தனியார் மருத்துவமனைகளிலும் சொட்டு மருந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த பணிகளுக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும். போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கும் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சோதனைச்சாவடிகள், விமான நிலையங்களில் பயணவழி மையங்கள் கொரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றி சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழகம் தொடர்ந்து 17 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே பெற்றோர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom