Type Here to Get Search Results !

மதமாற்றம், திருமணத்துக்காக மதம் மாறுதலுக்கு அவசரச் சட்டம் மசோதாவுக்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை இன்று ஒப்புதல்


கட்டாய மதமாற்றம், திருமணத்துக்காக மதம் மாறுதல் ஆகியவற்றைத் தடுக்கும் பொருட்டு அவசரச் சட்டம் கொண்டுவரும் மசோதாவுக்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளித்தவுடன் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும்.

இந்த மதச் சுதந்திர மசோதாவின்படி, ஒருவரைத் திருமணத்துக்காக கட்டாயமாக மதமாற்றம் செய்தால், அவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

லவ் ஜிகாத்தைத் தடுக்கும் வகையில் உத்தரப் பிரதேச அரசு சமீபத்தில் சட்டம் கொண்டுவந்தது. அதைப் பின்பற்றி மத்தியப் பிரதேச அரசும் அவசரச் சட்டம் பிறப்பிக்க உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை அரசு தாக்கல் செய்ய முடியாததால், அவசரச் சட்டம் கொண்டுவரும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. இந்த மசோதா தற்போது ஆளுநர் ஆனந்தி பென்படேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் கையொப்பமிட்டவுடன் அவசரச் சட்டமாகும்.

மத்தியப் பிரதேச மதச் சுதந்திர மசோதா-2020 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாவில், திருமணத்துக்காக ஒருவரைக் கட்டாயமாக மதம் மாற வற்புறுத்தினால், கட்டாயப்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்

இந்தச் சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம், ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், ஆசைகாட்டி மதமாற்றம் செய்தல், கட்டாயத்தால் மதம் மாறுதல், திருமணத்துக்காக மதம் மாறுதல், பணம், வேலை ஆகியவற்றுக்காகப் போலியாக மதம் மாறுதல் போன்றவற்றைத் தடை செய்யும் விதத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதம் மாற விரும்புவோர் 2 மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். மதமாற்றம் செய்ய விரும்பும் மதத் தலைவர்களும் 60 நாட்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை மீறினால், 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

பட்டியலினத்தவர், பழங்குடியினர், மைனர் சிறுமி, சிறுவர்களை மதமாற்றம் செய்தால், 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

தான் சார்ந்திருக்கும் மதத்தை மறைத்தோ அல்லது தவறான தகவல் அளித்தோ திருமணம் செய்தால், 3 முதல் 10 ஆண்டுகள் சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் . கூட்டமாக மக்களை மதமாற்றம் செய்தாலும் 5 முதல் 10 ஆண்டுகள் சிறையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom