Type Here to Get Search Results !

20 நாள்களுக்கு முன்பு இறந்த பெண் காவலர் சடலத்துடன் வீட்டிற்குள் ஜெபம்... திண்டுக்கல்லில் பரபரப்பு


20 நாள்களுக்கு முன்பு இறந்த பெண் காவலர் சடலத்துடன் வீட்டிற்குள் ஜெபம் நடத்திய சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அடுத்துள்ள நத்தவனப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்னை இந்திரா(38). இவரது கணவர் பால்ராஜ். இவர்களுக்கு ரட்சகன்(11), மெர்சி(8) என குழந்தைகள் உள்ளனர். அன்னை இந்திரா, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக அன்னை இந்திராவிடமிருந்து பிரிந்த பால்ராஜ், தேனி மாவட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அன்னை இந்திரா, கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார். விடுப்பு முடிந்து அன்னை இந்திரா கடந்த 26ஆம் தேதி பணிக்கு வர வேண்டுமாம். ஆனாலும் அவர் பணிக்கு வராததால் 2 பெண் காவலர்கள் அவரது வீட்டிற்கு விசாரிப்பதற்காக வியாழக்கிழமை சென்றுள்ளனர்.

அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், தூர்நாற்றமும் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீசார், இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கதவை தட்டியுள்ளனர். சிறிது நேரத்தில், அன்னை இந்திராவின் அக்கா வாசுகி மற்றும் ஜெபக் கூட்டங்கள் நடத்தி வரும் சுதர்சன்(45) ஆகியோர் கதவை திறந்துள்ளனர். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில், சில நாள்களுக்கு முன்பு அன்னை இந்திரா இறந்துவிட்டதாகவும், உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் ஜெபம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அன்னை இந்திராவின் சடலத்தின் மீது துணிகளை வைத்து மூடி ஜெபம் நடத்தியது தெரிய வந்தது. உயிர்தெழுவார் என்ற நம்பிக்கையில் ஜெபம்:
இதுதொடர்பாக காவல்துறை சார்பில் தெரிவித்ததாவது-அன்னை இந்திரா உடல் நிலை சரியில்லாத காரணத்தால், கட்டாய ஓய்வு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். ஆனாலும், அவருக்கு கட்டுப்பாட்டு அறையில் மாற்றுப் பணி வழங்கப்பட்டிருந்தது. உடல் நிலை சரியில்லாத அன்னை இந்திராவுக்கு, ஜெபக் கூட்டங்கள் நடத்தி வரும் எரியோடு வெள்ளனம்பட்டியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக அன்னை இந்திராவுடன் சுதர்சனனும் தங்கியிருந்துள்ளார்.

இதனிடையே அன்னை இந்திராவின் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டதை அடுத்து, வாடிப்பட்டியிலுள்ள அவரது அக்கா வாசுகி என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் கடந்த 1 மாதமாக வாசுகியும், அன்னை இந்திரா வீட்டிலேயே தங்கியிருந்து கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி அன்னை இந்திரா இறந்துவிட்டதாகவும், அவர் மீண்டும் உயிர்தெழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் ஜெபம் செய்து வந்ததாகவும் வாசுகி மற்றும் சுதர்சனன் ஆகியோர் தெரிவித்தனர். அன்னை இந்திராவின் சடலத்தை வீட்டிலேயே பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் குழுவும், அவர் 10 நாள்களுக்கு முன்னதாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது. அதன்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom