Type Here to Get Search Results !

திமுகவினர் நம்மை திசை திருப்புவார்கள்... அதற்கு ஆட்படாமல் நமது வேலையை நாம் பார்க்க வேண்டும் : அமைச்சர் சி.வி.சண்முகம்


அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளோம் என்று சிதம்பரத்தில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

சிதம்பரம் தொகுதி அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

இதில் கலந்துகொண்டு மண்டலப் பொறுப்பாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசுகையில், ''இந்தத் தேர்தல் நமக்கு ஒரு சவாலான தேர்தலாகும். இந்தத் தேர்தலில் கண்டிப்பாக நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஏனெனில் ஜெயலலிதா இல்லாத ஒரு தேர்தலைச் சந்திக்கின்றோம். எனவே, கட்டாயம் நீங்கள் வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இந்த மாவட்டம் ஜெயலலிதாவின் கோட்டை ஆகும். பெண்கள் இந்தக் கூட்டத்தில் அதிகமாக உள்ளனர். பெண்களால்தான் சமையல் அறை வரை கூடச் சென்று வாக்குக் கேட்க முடியும். அதனால் ஆண்களாகிய நீங்கள் களத்தில் இறங்கிக் கடுமையாக வேலை செய்ய வேண்டும். வாக்காளர்களைப் பார்த்துத் தொடர்ந்து வணக்கம் சொல்லுங்கள். இதன் மூலம் ஓட்டு விழும்.

அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளோம். ஜெயலலிதா தன் கடைசிக் கூட்டத்தில் பேசுகையில் இந்தக் கட்சி 100 ஆண்டுகளைக் கடந்தும் இருக்கும். இதற்கு எல்லாரும் பாடுபட வேண்டும் என்று கூறிச் சென்றுள்ளார். அதை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

இன்றும் 2 மாதங்களில் தேர்தல் வர உள்ளது. தேர்தல் வரை நமக்குள் இருக்கும் சண்டை சச்சரவுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டுக் கடுமையாக உழைக்க வேண்டும். உழைத்தால் அதிமுகவில் பதவி கிடைக்கும்.

திமுகவினர் பிரச்சாரத்தில், செய்யாததைச் சொல்லி ஓட்டுக் கேட்பார்கள். ஆனால், நாம் செய்யக்கூடியதை மட்டும் சொல்லித்தான் ஓட்டு கேட்போம். திமுகவினர் நம்மை திசை திருப்புவார்கள். அதற்கு ஆட்படாமல் நமது வேலையை நாம் பார்க்க வேண்டும். திமுகவை நாம் அழிக்க வேண்டாம். இந்தத் தேர்தலுக்கு பிறகு அது தானாகவே அழிந்துவிடும்'' என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

கூட்டத்தில் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன், முன்னாள் அமைச்சர்கள் செல்வி ராமஜெயம், கலைமணி, சிதம்பரம் நகரச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலவேறு நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். இக்கூட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom